அதிகரிக்கும் கரோனா; மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி; முதல் தவணையாக ரூ. 8873.6 கோடி விடுவிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

பேரிடர் நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ. 8873.6 கோடியை முன்கூட்டியே மத்திய அரசு விடுவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், 2021- 22 ஆம் ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசு பங்கின் முதல் தவணையை, மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை, பொதுவாக வழங்கப்படும் காலகட்டத்தை விட முன்கூட்டியே விடுவித்துள்ளது.

மாநிலங்களுக்கு, ரூ. 8873.6 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் முதல் தவணை, பொதுவாக ஜூன் மாதத்தில் விடுவிக்கப்படும்.

எனினும், பொதுவான நடைமுறையைத் தளர்த்தி, இந்த நிவாரண நிதி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், கடந்த நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையின் பயன்பாட்டு சான்றிதழுக்காக காத்திராமல், நிதித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.‌

விடுவிக்கப்பட்டுள்ள தொகையில் 50 சதவிதத்தை, அதாவது, ரூ. 4436.8 கோடியை, கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு மையங்களுக்கான கட்டணம், செயற்கை சுவாசக் கருவிகள், காற்றை தூய்மைபடுத்தும் கருவிகள், அவசர சிகிச்சை ஊர்திகள் சேவைகளை மேம்படுத்துதல், கோவிட்- 19 மருத்துவமனைகள், கோவிட் சிகிச்சை மையங்கள், உடல் வெப்பநிலை சோதனைக் கருவிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனை ஆய்வகங்கள், பரிசோதனைக் கருவிகள், கட்டுப்பாட்டு மண்டலங்கள் போன்ற கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in