கரோனா 2வது அலையை எதிர்கொள்ள தேசிய அளவிலான கொள்கை தேவை: சோனியா காந்தி

கரோனா 2வது அலையை எதிர்கொள்ள தேசிய அளவிலான கொள்கை தேவை: சோனியா காந்தி
Updated on
1 min read

கரோனா 2வது அலையை எதிர்கொள்ள தேசிய அளவில் கொள்கை வகுக்க வேண்டும். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விழித்தெழ வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. அன்றாட கரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்திருக்கிறது. உலக நாடுகள் இந்தியாவின் நிலையைப் பார்த்து வேதனை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசிய அளவிலான கொள்கை வகுத்து கரோனாவை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக இன்று காணொலிக் காட்சி மூலம் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

நாடு முழுவதும் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சூழலில் மத்திய, மாநில அரசுகள் விழித்தெழுந்து தங்களின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். கரோனா பேரிடர் குறையும்வரை குறைந்தபட்சம் மாதந்தோறும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.6000 செலுத்தப்பட வேண்டும்.

கரோனா தடுப்பூசியை குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாகவே வழங்க வேண்டும். நாடு முழுவதும் கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் இன்னும்பிற மருந்துகளையும் போர்க்கால அடிப்படையில் தயார்நிலையில் வைக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் கரோனாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் இதுவரை பலலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் சோதனையான காலகட்டம். இந்த நேரத்தில் நாம் ஒருவொருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும்.

நிறைய மாநிலங்கள் அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன் இல்லாமல் திணறுகின்றன. கரோனாவை எதிர்கொள்ள தேசிய அளவிலான கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

இந்தக் கடுமையான நெருக்கடி நேரத்தில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இந்நேரத்தில் வேற்றுமைகளைக் கடந்து ஒன்றுபட வேண்டும். நம் தேசம் இதற்கு முன்னதாகவும் பல இன்னல்களை சந்தித்துள்ளது. இப்போது நடக்கும் கரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசுக்கு நிச்சயமாக துணை நிற்போம். எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in