Last Updated : 01 May, 2021 11:28 AM

 

Published : 01 May 2021 11:28 AM
Last Updated : 01 May 2021 11:28 AM

கரோனா பரவலுக்கு மத்தியில் ஹரித்துவார் கும்பமேளாவில் 70 லட்சம் பேர் பங்கேற்பு: 2,600 பேருக்கு கரோனா தொற்று உறுதி

கும்பமேளாவில் கடந்த மாதம் 14ம் தேதி பக்தர்கள் புனித நீராடிய காட்சி | படம் உதவி ட்விட்டர்

ரிஷிகேஷ்

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடந்து முடிந்த கும்பமேளா திருவிழாவில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளார்கள் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில் நடத்தப்பட்ட கும்பமேளா திருவிழா கரோனா வைரஸை பரப்பும் சூப்பர்-ஸ்பிரட்டர் என்று சொல்லப்படுகிறது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளா திருவிழாவை 30 நாட்கள் மட்டும் அதாவது ஏப்ரல் மாதம் மட்டும் நடத்திக்கொள்ள அகாதாக்கள் முடிவு செய்தனர். ஆனால், நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கும்பமேளாவில் ஏப்ரல் 2வது வாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், மடாதிபதிகள் கூடி புனித நீராடினர்.

கடந்த மாதம் 14-ம் தேதி மட்டும் ஹரித்வாரில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக, உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.

உத்தரகாண்ட் சுகாதாரத் துறையினர், போலீஸார் எனப் பலரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை வலியுறுத்தியும், பெரும்பாலானோர் கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் புனித நீராடினர் .

கடந்த 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கும்பமேளாவுக்கு வந்திருந்த 2.35 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 2,600 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மத்தியப் பிரதேச மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கரோனா தொற்றால் கடந்த மாதம் 13-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, 13 அகாதாக்களின் அமைப்பான நிரஞ்சனி அகாதா, ஏப்ரல் 17ம் தேதியுடன் கும்பமேளாவை முடித்துக்கொள்வதாக அறிவித்ததது.

இதற்கிடையே கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கும்பமேளாவில் பக்தர்கள், சாதுக்கள் குவிந்து வருவது கண்டு வேதனை அடைந்த, பிரதமர் மோடி, கும்பமேளாவில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று சாதுக்களிடம் கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடியின் வார்த்தைக்கு மதிப்பளித்து பல சாதுக்கள் புனித நீராடுதலிலும், கும்பமேளாவுக்கு வருவதையும் குறைத்துக்கொண்டனர்.

இருப்பினும், இந்த கும்பமேளாவில் 3 சஹி புனித நீராடல்கள் முக்கியமாகக் கருதப்பட்டது, ஏப்ரல் 12, 14 மற்றும் 27-ம் தேதிகளி்ல் புனித நீராடுதல் மிகவும் புனிதமாகக் கருதப்பட்டது.

ஏற்கெனவே 12, 14-ம் தேதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியநிலையில் கடந்த 27-ம் தேதியும் பக்தர்கள் ஹரித்துவார் வந்திருந்து, கங்கை நதியில் புனித நீராடினர்.

கடந்த 30 நாட்களாக நடந்து வந்த ஹரித்துவார் கும்பமேளா நேற்றுடன் முடிவடைந்தது. இந்த 30 நாட்கள் கும்பமேளா திருவிழாவில் ஏறக்குறைய 70 லட்சம் பக்தர்கள் பங்கேற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹரித்துவார் நகர தலைமை மருத்துவ அதிகாரி எஸ்.கே.ஜா கூறுகையில் “கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதை ஊக்குவிக்கும் வகையில் கும்பமேளா நடத்தப்பட்டது மிகப்பெரிய சவாலாக இருந்தது” எனத் தெரிவித்தார்

கும்பமேளாவுக்கான மருத்துவ அதிகாரி அர்ஜுன் சிங் செங்கார் கூறுகையி்ல் “ கும்பமேளாவுக்கு வந்த கூட்டத்தைக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. கரோனா விதிகளை மதிக்காமல், சமூக விலகலைக் கடைபிடிக்காமல் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மடாதிபதிகள், சாதுக்கள் முதலில் கரோனா பரிசோதனை செய்ய மறுத்தனர், ஆனால், 2-வது சஹி புனித நீராடலுக்குப்பின் பரிசோதனைக்கு ஒத்துழைத்தனர். ஏற்ககுறைய 2 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டதில் 2,600 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 70 லட்சம் பேர்வரை பங்கேற்றனர்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x