Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

கரோனா இரண்டாம் அலையை எப்படி சமாளிக்கப் போகிறோம்?

இந்தியா முழுவதும் சீனப் பெருந்தொற்றின் இரண்டாம் அலை உக்கிரமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்து விட்டது.

இந்த நெருக்கடியை, பொருளாதார ரீதியாக நாம் எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்..?

தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பூசி கிடைத்து இருப்பதுதான் இப்போதைக்கு ஆறுதல் தரும் விஷயம். முதல் அலையின் பாதிப்புகளில் இருந்தே மக்கள் முழுமையாக மீளாத நிலையில் மீண்டும், முன்பை விட வலிமையாக வந்து தாக்கினால், அரசும் மக்களும் பொருளாதார ரீதியாகத் தாக்குப் பிடிக்க முடியுமா..?

முதலில், அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்குதல். குறைந்த விலையில் அரசாங்கம் தடுப்பூசி பெற்றாலும் கூட, சுமார் 100 கோடி பேருக்கு இரண்டு தவணைகளுக்கும், சுமார் 20,000 கோடி ரூபாய் செலவாகும்.

தற்போதுள்ள நிலையில் அடுத்த ஒரு மாதத்தில் நாடு முழுவதும் சுமார் இரண்டு கோடி பேர் தொற்று அபாயத்துக்கு ஆளாகலாம். மருத்துவ உபகரணங்கள், சிகிச்சை வசதிகள், மருந்துப் பொருட்கள், மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் சேர்த்து, சுமார் 20,000 கோடி ரூபாய் தேவைப்படலாம்.

நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம். இதனால் அன்றாடத் தொழிலாளர்கள், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போகலாம். இந்த வகையில் சுமார் 10 கோடி பேருக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் பெறுமான நிவாரணம் என்றாலும், தினசரி ரூ.500 கோடி; அடுத்த நூறு நாட்களுக்கு ரூபாய் 50,000 கோடி தேவை.

ஏறத்தாழ ஒரு லட்சம் கோடிக்கு மேல் எதிர்பாரா நிதிச்சுமையை ஏற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ள அரசாங்கம், இதற்கான நிதி ஆதாரத்தை எங்கிருந்து பெறப் போகிறது.,?

ஊரடங்கு மற்றும் நோய்த்தொற்று அபாயம் காரணமாக அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் உற்பத்தி பாதிக்கப்படும்; வருமானம் குறையும், ஒட்டுமொத்த பொருளாதாரம் சுருங்கிப் போகும். இந்தச் சூழலில் அரசுக்கான வரி வருவாயில் மிகப் பெரிய சரிவு ஏற்படும்.

இயல்பு நிலையில், மத்திய அரசுக்கு ஆண்டு வரி வருவாய் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய். (மறைமுக வரி – 10 லட்சம் கோடி; நேரடி வரி – 10 லட்சம் கோடி). இதனை அரசு எவ்வாறு சரி கட்டப் போகிறது..?

தமிழ்நாடு, மகராஷ்டிரா, குஜராத் போன்ற தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் இந்திய பொருளாதாரத்துக்குக் கைகொடுத்து வருகின்றன. இங்கெல்லாமே நிதி நிலைமை அப்படி ஒன்றும் ஆரோக்கியமாக இல்லை. பிற மாநிலங்களில் நிலைமை படுமோசம். பெரும்பாலான மாநில அரசுகள் . மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து உள்ளன.

தனியார் துறையிலும் பாதிப்பு மிக அதிகம். குறிப்பாக, சிறு தொழில்கள் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. கல்வி, ஊடகம், போக்குவரத்து, சுற்றுலா, கேளிக்கைத் துறைகள் – முற்றிலுமாக முடங்கிக் கிடக்கின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க, சில ஆண்டுகள் ஆகலாம்.ஆனால் இப்போதைக்கு என்னென்ன சாதகங்கள் தெரிகின்றன..?

பொதுவாகப் பல மாநிலங்களில் கடந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்து இருக்கிறது. வரும் ஆண்டிலும் சராசரி மழைப்பொழிவு இருக்கலாம் என்று வானியல் கணிப்புகள் கூறுகின்றன. இதனால் விவசாய உற்பத்தி தொடர்ந்து சீராக இருக்கும்; நமது பொருளாதாரம் அபாய நிலைக்குப் போகாமல் காப்பாற்றும்.

மீன் வளம், கனிம வளம், மற்றும் சேவைத் துறை, நம்பிக்கை தருவனவாக உள்ளன.

ஓராண்டாக சரிவில் இருந்த பொருளாதாரம், கடந்த ஓரிரு மாதங்களில் இயல்பு நிலையை நோக்கிப் பயணித்த வேகம், மிக நல்ல அறிகுறி.

அரசு நிர்வாகத்தில் கடுமையான சிக்கன நடவடிக்கைகள், எளிதாக்கப்படும் விதிமுறைகள், நடுத்தட்டு மக்களுக்கு வருமானவரிச் சலுகைகள், தாமதமின்றிக் கிடைக்கும் நிவாரண உதவிகள் ஆகியன இந்நேரத்தில் மிகுந்த நற்பயனைத் தரலாம்.

மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி உறுதி செய்யப்படாமல் தேசியப் பொருளாதாரம் சீராகாது. எனவே ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே விரிவான பொருளாதார செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தரப்படும் முக்கியத்துவம், அவசரகால பொருளாதார முனைவுகளுக்கும் தரப்பட வேண்டும். இல்லையேல், நிதி சார்ந்த பொருளாதார அவசர நிலைப் பிரகடனத்துக்கு நாம் உள்ளாக நேரிடலாம்.

பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய, பல்வேறு துறை விற்பன்னர்களைக் கொண்ட, அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கு கொள்ளும், ‘தேசிய பொருளாதார மீட்புக் குழு’ அமைத்து, தகுந்த வழிமுறைகளைக் கண்டறியலாம்.

இது ஓர் அசாதாரண சூழல். இதற்கேற்ப, அசாதாரண முயற்சிகள் வேண்டும். இருக்கின்றனவா…?

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x