

நாட்டில் கரோனா பிரச்சினை களை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “டெல்லி அரசு ஒத்துழைப்பு அணுகுமுறையை மேற் கொள்ள வேண்டும். இக்கட்டான நேரத்தில் அரசியல் சச்சரவு எதுவும் கூடாது. அரசியல் என்பது தேர்தல் காலத்துக்கானது. தற்போது குடிமக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். நாங்கள் ஒத்துழைப்பை விரும்புகிறோம்” என்று தெரிவித்தனர்.
டெல்லி அரசு தரப்பில், “நிலைமையை கட்டுப்படுத்த அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கும்” என உறுதி அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் சோலிசிட்டர் ஜெனரலிடம் நீதிபதிகள் கூறும்போது, “ஒட்டு மொத்தநாட்டையும் டெல்லி பிரதிநிதித்துவம் செய்கிறது. தனி இன அடிப்படையில் இங்கு யாரும் இல்லை. டெல்லி மீது மத்திய அரசுக்கு தனி பொறுப்பு உள்ளது. டெல்லி மக்களுக்கு மத்திய அரசு கடமையாற்ற வேண்டும்” என்றனர்.
நீதிபதிகள் முன்பு மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி சுனிதா தப்ரா கூறும்போது, “மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்வதில் மத்திய அரசு சமநிலையில் செயல்படுகிறது. பாரபட்சமாக செயல்படவில்லை” என்றார்.