

கரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்ய அரசு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மே மாதத்திலிருந்து இந்தியாவில் மக்களுக்குச் செலுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரித்த கோவாக்சின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. 3-வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது.
ரஷ்யாவின் ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம், தொற்றுநோய்வியல், நுண் உயிரியலுக்கான காமாலியா தேசிய ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள கரோனா வைரஸுக்கு எதிரான ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்தியாவில் உள்ள ரெட்டிஸ் மருந்து நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்தது. இந்தியாவில் இந்த ஸ்புட்னிக் தடுப்பூசிக்கான கிளினிக்கல் பரிசோதனையையும் ரெட்டிஸ் நிறுவனம் முடித்துவிட்டது.
அவரசத் தேவைக்காக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்திக்கொள்ள டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து, முதல் கட்டமாக 1.25 கோடி தடுப்பூசிகளை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் பால வெங்கடேஷ் வர்மா நேற்று அளித்த பேட்டியில், “ இந்தியாவில் உள்ள மக்களுக்கு 3-வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிஸ்-வி அடுத்த மாதத்திலிருந்து பயன்பாட்டுக்கு வரும். மே மாதத் தொடக்கத்திலிருந்தே இந்திய மக்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன”எனத் ெதரிவித்தார்.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள 60-வது நாடு இந்தியாவாகும். ஏற்ககுறைய உலகளவில் 40 சதவீதம் அல்லது 300 கோடி மக்கள் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் செயல்திறன் கரோனா வைரஸுக்கு எதிராக 91.6சதவீதமாகஇருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.