Last Updated : 30 Apr, 2021 11:13 AM

 

Published : 30 Apr 2021 11:13 AM
Last Updated : 30 Apr 2021 11:13 AM

கரோனா நிவாரணப் பொருட்களுடன் அமெரிக்காவின் முதல் விமானம் இந்தியா வந்தது; 2-வது விமானமும் புறப்பட்டது

கரோனா நிவாரணப் பொருட்களுடன் புதுடெல்லி வந்து சேர்ந்துள்ள அமெரிக்க ராணுவ விமானம் | படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களுடன் அமெரிக்காவின் முதல் ராணுவ விமானம் இன்று புதுடெல்லி வந்து சேர்ந்தது.

நூற்றுக்கணக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஒரு லட்சம் முகக் கவசங்கள், ரேபிட் ஆன்டிஜென் கிட் உள்ளிட்ட பொருட்களுடன் விமானம் வந்து சேர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 3 லடத்துக்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும், தடுப்பூசிப் பற்றாக்குறையும் நிலவுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடந்த 26-ம் தேதி தொலைப்பேசியில் பேசிக் கேட்டறிந்தார். இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்குத் தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும் என்று உறுதியளித்தார்.

இதன்படி, கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு தேவையான நிவாரணப் பொருட்களுடன் அமெரிக்க ராணுவத்தின் சி-5எம் சூப்பர் கேலக்ஸி விமானம் இன்று காலை புதுடெல்லி வந்து சேர்ந்துள்ளது. பல்வேறு நிவாரணப் பொருட்கள், மருத்துவக் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் 2-வது விமானமும், கலிபோர்னியாவிலிருந்து புதுடெல்லிக்கு புறப்பட்டுள்ளது. மே 3ம் தேதிக்குள் அமெரிக்கா சார்பில் 3 விமானங்கள் நிறைய நிவாரணப் பொருட்கள் இந்தியா வந்தடையும்.

இது குறித்து அமெரி்க்க தூதரகம் வெளியிட்ட செய்தியில் “ அமெரிக்கா சார்பில் கரோனா நிவாரணப் பொருட்களுடன் ராணுவ விமானம் இந்தியா வந்து சேர்ந்துள்ளது. 70 ஆண்டுகள் நட்புறவுடன் இந்தியாவுடன் இருக்கும்அமெரிக்கா, இந்த இக்கட்டான நேரத்தில் துணை நிற்கும். கரோனா வைரஸுக்கு எதிரானப் போரை கூட்டாக எதிர்கொள்வோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டிராவிஸ் விமானப்படைத் தளத்திலிருந்து நிவாரணப் பொருட்களுடன் இந்தியா வந்துள்ள அமெரிக்க ராணுவத்தின் சி-5எம் சூப்பர் கேலக்ஸி விமானத்தில் 400 ஆக்சிஜன் சிலிண்டர்கள், கலிபோர்னியா அரசு நன்கொடையாக அளித்த ரெகுலேட்டர்கள், 9.60 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள், ஒரு லட்சம் என்95 மாஸ்குகள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.

இந்நிலையில் இந்தியாவுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களுடன் அமெரிக்காவின் 2-வது விமானம் சி-17 குளோப்மாஸ்டர்-3 விமானம் கலிபோர்னியாவில் உள்ள டிராவிஸ் விமானப்படைத் தளத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் முகக்கவசங்கள், பல்ஸ்ஆக்சிமீட்டர், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் ரெகுலேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சாந்து ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “ ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கரோனா நிவாரணப் பொருட்களுடன் இரு விமானங்கள் இந்தியா புறப்பட்டுள்ளன. சவாலான நேரத்தில் இந்தியாவுக்கு தோளோடு தோள் கொடுத்து உதவிய அமெரி்க்க அதிபருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x