16.16 கோடி  தடுப்பூசி டோஸ்கள்; மாநிலங்களுக்கு மத்திய அரசு விநியோகம்

16.16 கோடி  தடுப்பூசி டோஸ்கள்; மாநிலங்களுக்கு மத்திய அரசு விநியோகம்
Updated on
1 min read

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசிடமிருந்து 16.16 கோடி எண்ணிக்கையில் தடுப்பூசி டோஸ்களை இலவசமாகப் பெற்றுள்ளன.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஐந்து முனை உத்திகளில் பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை, சரியான வழிகாட்டு நெறிமுறை‌ ஆகியவற்றுடன் தடுப்பூசி, இந்திய அரசின் மிக முக்கிய தூணாக விளங்குகிறது.

கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் மூன்றாவது கட்டம் வரும் மே 1-ஆம் ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நேற்று (ஏப்ரல் 28) தொடங்கியது.

இதன்படி 18 வயதிற்கு மேற்பட்டோர் கோவின் தளத்தில் (cowin.gov.in) நேரடியாகவோ அல்லது ஆரோக்கிய சேது செயலி மூலமாகவோ முன் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்திய அரசு இதுவரை சுமார் 16.16 கோடி (16,16,86,140) தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. இவற்றில் வீணான டோஸ்கள் உட்பட மொத்தம் 15,10,77,933 டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

ஒரு கோடிக்கும் மேலான (1,06,08,207) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ளன.

மேலும் 20 லட்சம் டோஸ்கள்‌ (20,48,890) அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும்.

மகாராஷ்டிராவில் தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதாகவும் இதனால் அம்மாநிலத்தில் தடுப்பூசி போடும் திட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடக செய்திகளில் கூறப்படுகிறது.

2021 ஏப்ரல் 28 வரை (காலை 8 மணி) மகாராஷ்டிரா மாநிலம் 1,63,62,470 தடுப்பூசி டோஸ்களைப் பெற்றுள்ளது.‌ இவற்றில் வீணான டோஸ்கள் (0.22%) உட்பட 1,56,12,510 டோஸ்கள் மொத்தம் செலுத்தப்பட்டுள்ளன. மீதம், 7,49,960 தடுப்பூசி டோஸ்கள் மாநில நிர்வாகத்தின் கையிருப்பில் உள்ளன.

மேலும் 20,48,890 கோவிட் தடுப்பூசி டோஸ்கள் அடுத்த மூன்று நாட்களில் அம்மாநிலத்திற்கு விநியோகிக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in