ஏடிஎம் காவலாளிகளை சுட்டு ஹைதராபாத்தில் கொள்ளை

ஏடிஎம் காவலாளிகளை சுட்டு ஹைதராபாத்தில் கொள்ளை
Updated on
1 min read

ஹைதராபாத்தில் ஏடிஎம் காவலாளிகளை துப்பாக்கியால் சுட்டு பணம் கொள்ளை அடிக்கப் பட்டது. இந்த சம்பவத்தில் காவலாளி ஒருவர் இறந்தார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று மதியம் 1.35 மணியளவில் கூகட்பள்ளி பகுதியில் வழக்கம் போல் மக்கள் நடமாட்டம் அதிகமாகஇருந்தது. அப்போது, எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்ப ஒரு வேன் வந்தது.

அங்கு காவலுக்கு இருந்த இரு காவலாளிகள், வேனில் இருந்து பணப்பெட்டியை ஏடிஎம் அறைக்குள் கொண்டு செல்ல உதவிக் கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்து, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், கண் இமைக்கும் நேரத்தில் காவலாளிகள் ஆலிபேக், ஸ்ரீநிவாஸ் ரெட்டி ஆகிய இருவரை துப்பாக்கியால் சுட்டு, பணத்தை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்த பயங்கரத்தைப் பார்த்த மக்கள் பயத்தில் உறைந்தனர். பின்னர், இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதற்குள் காயமடைந்த காவலாளிகளை நிஜாம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆலிபேக் உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் நகர போலீஸ் ஆணையர் சஜ்ஜனார் மற்றும் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்க மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்ததுணிகர சம்பவம் ஹைதராபாத்வாசிகளிடையே பீதியை உண்டாக்கி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in