Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

உ.பி.யின் அலிகரில் அதிக விலைக்கு ஆக்சிஜன் விற்பனை- தொழிற்சாலை கருவிகளை அடித்து உடைத்த மக்கள்

கோப்புப் படம்

புதுடெல்லி

உத்தர பிரதேசத்தின் பல மாவட்டங் களிலும் மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பது அரிதாகி உள்ளது. இதனால் கரோனா நோயாளிகளின் உறவினர்களையே ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்ய சொல்கின்றனர்.ஆக்சிஜன் விநியோகம் செய்யும் நிறுவனங்களின் முகவரியும் அதன் கைப்பேசி எண்களுடன் சமூகவலைதளங்களில் வலம் வருகின்றன. ஆனால், இவற்றை தொடர்பு கொண்டால் அவற்றில் பெரும்பாலான எண்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற மோசமான சூழலில் நேரில் செல்பவர்களுக்கு தனியாரில் சிலரிடம் ஆக்சிஜன் கிடைப்பதாக தகவல் பரவியது.

அலிகரின் எல்லையிலுள்ள காஸிம்பூரில் தனியார் ஆக்சிஜன் தொழிற்சாலை உள்ளது. அன்றாடம் நான்கு டன் வரையில் இங்கு ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. இங்கு முறைப்படி இல்லாமல் கறுப்பு சந்தைகளில் ரூ.15,000 வரை ஆக்சிஜன் சிலிண்டர்கள் விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது. அங்கு சென்றிருந்த பொதுமக்களில் சிலர் நேரில் கண்டறிந்தனர். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் உற்பத்தி நிலையத்தின் உபகரணங்களை அடித்து உடைத்தனர்.

தொடர்ந்து தொழிற்சாலையின் நிர்வாகிகளும் தாக்கப்படும் சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து அப்பகுதியின் பாஜகவின் எம்எல்ஏவான தாக்கூர் தல்வீர்சிங் தனது பேரன் விஜய்குமார்சிங்கை அங்கு அனுப்பி வைத்தார். அவர், இருதரப்பிலும் பேசி நிலைமையை சரி செய்தார். எனினும், தொழிற்சாலையின் உபகரணங்கள் சேதமடைந்ததால் உற்பத்தியை துவங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை பழுது பார்க்க காஜியாபாத்திலிருந்து பொறியாளர்கள் வரவழைக்கப் பட்டுள்ளனர். இவை சரியாகி உற்பத்தி மீண்டும் துவங்க இரண்டு தினங்களாகும். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவாகி விசாரணை நடைபெறுகிறது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இதனிடையே, அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையிலும் படுக்கைகள் கிடைப்பது சிரமாக உள்ளது. இங்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய ரூ.1.41 கோடி செலவில் ஒரு உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை இன்னும் நான்கு வாரங்களில் முடிக்க துணை வேந்தர் டாக்டர்.தாரீக் மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.

அலிகரை சுற்றி வாழும் பொதுமக்களிடையே இந்த மருத்துவமனை சிறந்ததாக கருதப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகமான இங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் பணியில் உள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 30 பேர் இறந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x