

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு இம்முறை 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 8-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
முர்ஷிதாபாத், பிர்பும், மால்டா,வடக்கு கொல்கத்தா ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகள் தேர்தலை எதிர்கொண்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6.30 வரை விறுவிறுப்புடன் நடைபெற்றது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வாக்குப் பதிவு தொடங்கும் முன்பு ஒரு கார் மோதியில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயம் அடைந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதால் அங்கு போலீஸார் விரைந்தனர்.
பாஜக வேட்பாளர் மீனா குமாரி புரோகித், பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் போது தனது வாகனம் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டதாக புகார் கூறினார். இந்நிலையில் இறுதிக் கட்ட தேர்தலில் 76.07 சதவீத வாக்குகள் பதிவாகின.
மேற்கு வங்கத் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் வாக்குஎண்ணிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்துடன் தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாமிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.