Last Updated : 26 Dec, 2015 06:37 PM

 

Published : 26 Dec 2015 06:37 PM
Last Updated : 26 Dec 2015 06:37 PM

நக்சல் தொடர்பு குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் சாய்பாபா மீண்டும் நாக்பூர் சிறையில்

மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு நீக்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழக் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, நாக்பூர் மத்திய சிறைச்சாலை அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தார்.

மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு உத்தரவிட்டதையடுத்து ஜாமீனில் இருந்த அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார். டிசம்பர் 31, 2015 வரை இவருக்கு ஜாமீன் இருந்தது.

இந்நிலையில் டிசம்பர் 23-ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு இவரது ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, 48 மணி நேரத்தில் அவர் சரணடைய வேண்டும் என்றும் அப்படி அவர் சரணடையத் தவறினால் போலீசார் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதனையடுத்து பேராசிரியர் சாய்பாபா வெள்ளிக்கிழமை இரவு நாக்பூர் மத்திய சிறை அதிகாரிகள் முன்னிலையில் சரண அடைந்ததாக நாக்பூர் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

சாய்பாபா சரணடைய இன்னும் கால அவகாசம் கேட்டு செய்யப்பட்டிருந்த மனுவை நீதிபதி அருண் சவுத்ரி நிராகரித்தார். அவர் நாக்பூர் சிறையிலிருந்த போது அவருக்கு முறையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதற்கான மருத்துவ அறிக்கையை சுட்டிக் காட்டி நீதிபதி இந்த சரண் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உடல்நலம் கருதி இவரது ஜாமீனை நீட்டிக்கக் கோரினர் வழக்கறிஞர்கள். பேராசிரியர் சாய்பாபா சக்கர நாற்காலியில் இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் சாய்பாபா மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு 2014-ம் ஆண்டு மே-மாதம் கைது செய்யப்பட்டார்.

அதாவது போலீஸ் தகவல்களின் படி, நக்சல் தலைவர்களுடன் சாய்பாபா தொடர்பு வைத்திருந்தார் என்றும் குறிப்பாக தலைவர் முப்பல்ல லஷ்மண ராவ் என்பவருடன் தொடர்ச்சியாக தகவல் பரிமாற்றத்தில் இருந்ததாகவும் தெரிகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் ஹேம் மிஸ்ராவைக் கைது செய்து விசாரித்த போது சாய்பாபாவுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தான் தூது சென்றதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x