Last Updated : 22 Dec, 2015 09:16 AM

 

Published : 22 Dec 2015 09:16 AM
Last Updated : 22 Dec 2015 09:16 AM

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி வழங்க 9 எம்.பி.க்கள் மட்டுமே சம்மதம்

தமிழக வெள்ள நிவாரணப் பணிக்கு எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி வரை அளிக்கலாம் என அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுவரை 9 எம்.பி.க்கள் மட்டுமே ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சர் விஜய்குமார் சிங் கடந்த 4-ம் தேதி எம்.பி.க்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். நவம்பர் மற்றும் டிசம்பரில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளசேதத்தை ‘அதிதீவிர இயற்கை பேரிடர்’ என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும் இதையொட்டி நாட்டின் அனைத்து எம்.பி.க்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1 கோடி வரை அளித்து உதவலாம் எனவும் கூறி யிருந்தார். இந்த கோரிக்கை வெளி யாகி நேற்றுடன் 17 நாட்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை மாநிலங்களவை உறுப்பினர்கள் 7 பேர், மக்களவை உறுப்பினர்கள் இருவர் என 9 எம்.பி.க்கள் மட்டுமே சம்மதம் அனுப்பியுள்ளனர். இந்த 9-ல் தமிழக எம்.பி.க்கள் 3 பேர் மட்டுமே உள்ளனர். இந்த மூவரில் டி.ராஜா(இந்திய கம்யூனிஸ்ட்), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட்), கே.பராசரன் (நியமனம்) ஆகியோர் ரூ. 1 கோடி செலவிட சம்மதம் அளித்துள்ளனர்.

மற்றவர்களில் பாதுகாப்பு அமைச்சரும் உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவருமான மனோகர் பாரிக்கர் ரூ.1 கோடி அளித்துள்ளார். டெல்லியின் ஜனார்தன் துவேதி, ஹரியாணாவின் குமாரி ஷெல்ஜா, கர்நாடகாவின் ரகுமான் கான் (இவர்கள் மூவரும் மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள்) ஆகியோர் தலா ரூ. 10 லட்சம் அளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். மக்களவை எம்.பி.க்களில் மேகாலயாவின் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த பி.எஸ்.சங்மா ரூ. 10 லட்சமும், கோவா பாஜக எம்.பி. நரேந்திர கேசவ் சவாய்க்கர் ரூ. 5 லட்சமும் அளிக்க சம்மதம் அனுப்பியுள்ளனர்.

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இயக்குநர் தபன் மித்ரா ‘தி இந்து’விடம் கூறும்போது, “நிதி அளிப்பது குறித்த சம்மதத்தை அவ்வப்போது ஒருசிலர் கொடுத்தபடி உள்ளனர். இதில் கூடுதல் தொகை சேர வேண்டி இன்னும் 15 அல்லது 20 நாட்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளோம். பிறகு இந்த தொகைக்காக செலவுகள் குறித்து தமிழக அரசிடம் பரிந்துரைகள் பெறுவோம். அதை சரிபார்த்த பின் இந்த நிதியை வெளியிடுவோம். இத்தொகை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் செலவிடப்பட்டு அதற்கான செலவுக் கணக்கை எங்களுக்கு அளிக்கப்பட வேண்டும்” என்றார்.

தமிழகத்தில் அதிமுக எம்.பி.க்களோ திமுக, பாமக, பாஜக எம்.பி.க்களோ தங்கள் சம்மதத்தை இதுவரை அனுப்பவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ’தி இந்து’விடம் திமுக எம்.பி. கனிமொழி கூறும்போது, “எவ்வளவு தொகை அளிப்பது என்பது குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பின் எங்கள் தலைவரிடம் ஆலோசித்து முடிவு செய்வோம். ஏனெனில் எங்களிடம் நிவாரணப் பணிகள் கேட்டு நேரடியாகவும் கோரிக்கைகள் வந்துள்ளன” என்றார்.

அதிமுக வட்டாரத்தில் ’தி இந்து’ கேட்ட போது தங்கள் கட்சித் தலைமை யின் உத்தரவுக்காக காத்திருப்பதாகத் தெரிவித்தனர். இரு அவைகளிலும் சேர்த்து அதிமுகவுக்கு 49 எம்.பி.க்கள் உள்ளனர். மாநிலங்களவையில் திமுக வுக்கு 4 எம்.பி.க்களும், மக்களவையில் தமிழக பாஜக சார்பில் 1 எம்.பி.யும் பாமக சார்பில் 1 எம்.பி.யும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x