

நாகாலாந்து மாநிலம் கோஹிமாவில் நடைபெற்ற தாக்குதலில் தொடர்புடைய தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் பெங்களூருவில் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி நாகாலாந்து மாநிலம் கோஹிமாவில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் 4 பேர் கொண்ட கும்பல், பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்திவரும், தடைசெய்யப்பட்ட அமைப்பான என்எஸ்சிஎன் (கே)-வுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்எஸ்சிஎன் (கே) அமைப்பை சேர்ந்த 3 பேரை நாகாலாந்தில் கைது செய்தனர். விசாரணையில் கோஹிமா தாக்குதலில் முக்கிய பங்காற்றிய குற்றவாளி அடோஷி ஷோப்பே (27) பெங்களூருவில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பெங்களூரு வந்த தேசிய புலனாய்வு அமைப்பினர், உள்ளூர் குற்றப்பிரிவு போலீஸாரு டன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அடோஷி ஷோப்பே எம்.ஜி. சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக பணிபுரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை அவரை விசாரித்தனர்.
அப்போது அடோஷி ஷோப்பே போலியான பெயரில் பணியாற்றி வருவதாகவும் கோஹிமா தாக்குதலில் ஈடுபட்டதாகவும் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த தேசிய புலனாய்வு அமைப்பினர் பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் அவரை நாகாலாந்துக்கு அழைத்துச்சென்று திங்கள் கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.