Last Updated : 29 Apr, 2021 08:56 PM

 

Published : 29 Apr 2021 08:56 PM
Last Updated : 29 Apr 2021 08:56 PM

அச்சுறுத்தும் கரோனா: உ.பி.யில் வாரம் 2 நாள் ஊரடங்கை நான்காக நீட்டித்து முதல்வர் யோகி அறிவிப்பு

கரோனா பரவலின் இரண்டாவது அலை உத்தரப் பிரதேசத்தை அச்சுறுத்துவதை நிறுத்தவில்லை. இதனால், அம்மாநிலத்தில் வாரம் 2 நாள் இருந்த ஊரடங்கை நான்கு என நீட்டித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஊரடங்கு வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணி முதல் செவ்வாய்க் கிழமை காலை ஏழு மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைக்காக முதல்வர் யோகி 11 அதிகாரிகளுடன் ஒரு குழு அமைத்துள்ளார்.

இக்குழுவின் பரிந்துரையின்படி அச்சுறுத்தும் கரோனாவைக் கட்டுப்படுத்த இந்த ஊரடங்கு நீட்டிப்பை முதல்வர் யோகி அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு உ.பி., முழுவதும் அமலில் இருக்கும்.எனினும், அத்தியாவசியத் தேவைகள் மற்றும் கட்டாய சேவைகளுக்கு விலக்கு இருக்கிறது. வார இறுதியின் இந்த ஊரடங்கில் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் யோகியின் உத்தரவின்படி இந்த ஊரடங்கு அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. எனவே, நாளை வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு நீட்டிக்கபட்ட முதல் ஊரடங்கு செயல்பாட்டுக்கு வரும்.

இது குறித்து முதல்வர் யோகி தனது உத்தரவில் மேலும் கூறும்போது, ‘ரெம்டெசிவிர் மருந்தின் விநியோகம் உறுதிப்படுத்தப்படும்.

இந்த மருந்து மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்படும். தனியார் மருத்துவமனைகளின் தேவைகளைப் பொறுத்து அவர்களுக்கும் இவை விநியோகம் செய்யப்படும்.

அனைத்து மருத்துவமனைகளும் ரெம்டெசிவிர் மருந்துகளின் தேவை மற்றும் விநியோக விவரங்களை முறையாகப் பதிவு செய்ய வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

உ.பி. அரசின் முயற்சியினால் புதிதாக இரண்டு கோவிட் மருத்துவமனைகள் லக்னோ மற்றும் வாரணாசியில் அமைகின்றன. இவற்றை மத்திய அரசின் டிஆர்டிஒ போர்க்கால அடிப்படையில் அமைத்து வருகிறது.

இந்நிலையில், உ.பி.யின் அரிதாகிவிட்ட ஆக்சிஜன் விநியோகம் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் முதல்வர் யோகி தகவல் அளித்துள்ளார்.

இந்த ஆக்ஸிஜனை தேவையான இடங்களுக்கு படிப்படியாக கொண்டு செல்லும் பணியில் அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உதாரணமாக விமானத்திலிருந்து இறங்குவது முதல் தரைவழி வரை எனக் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் யோகி.

உ.பி.யின் ஆக்சிஜன் தேவைக்காக உத்தராகண்டின் ருடிகி, டெஹராடூன் மற்றும் ஜார்கண்டின் பொகாரோ, ஜம்ஷெட்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து அனுப்பப்பட்டு வருகிறது. இதில் நேற்று மட்டும் உ.பி.,க்காக 650 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வந்து சேர்ந்துள்ளதாகவும் முதல்வர் தகவல் அளித்துள்ளார்.

இதன் மீதான செயல்பாடுகள் குறித்து முதல்வர் யோகி கூறுகையில், ‘ஆக்சிஜனை சேமித்து வைக்கும் கொள்ளளவு டேங்கர்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இவைகளில் 20 டேங்கர்கள் நேரடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு அதிலுள்ள ஆக்சிஜன் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.’ எனத் தெரிவித்தார்.

எனினும், ரெம்டெசிவிர் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகம் கருப்புச் சந்தையிலும் அதிக விலைக்கு உபியில் விற்பனையாவதும் தொடர்கிறது. இதைத் தடுக்க அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் யோகி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத சூழலும் தொடர்கிறது. இதை சமாளிக்க ஒருபுறம் அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதலாகப் படுக்கைகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதை மேலும் சமாளிக்க வீடுகளிலும் தங்கியபடி காணொளியின் மூலம் மருத்துவ சிகிச்சை பெறுவது சிறந்த செயல் எனவும் முதல்வர் யோகி ஆலோசனை அளித்துள்ளார்.

கோவிட் 19 மருத்துவப் பரிசோதனை குறித்து முதல்வர் மேலும் கூறும்போது, ‘இதுவரை உ.பி.,யில் நான்கு கோடி பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது, எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் மிக அதிகமான பரிசோதனை எண்ணிக்கையாகும்.

சில மாவட்டங்களில் தவறான சோதனைகளும், போலி மருத்துவர்களின் சிகிச்சைகளும் அளிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.மனிதநேயத்தின் எதிரிகளான இவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x