

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் திருவிழா முடிந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியிருக்கிறது.
மொத்தம் 294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த மார்ச் 27-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை.
இதனால், 292 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருக்கிறது.
ஏபிபி செய்தி நிறுவனமும், சிவோட்டர் நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 292 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 152 முதல் 164 தொகுதிகளைக் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பாஜக 109 முதல் 121 இடங்களைக் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் வெறும் 14 முதல் 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்குசதவீதம்?
திரிணமூல் காங்கிரஸ்: 42.1%
பாஜக: 39%
காங்கிரஸ்: 15.4%
வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர்:
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோரே தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்தார். தேர்தலில், மம்தா மீண்டும் அரியணை ஏறுவார் என அடித்துக் கூறிய பிரசாந்த் கிஷோர் இந்தத் தேர்தலில் பாஜக தன்னை தவிர்க்க முடியாத சக்தியாக மாநிலத்தில் நிரூபித்துக் கொள்ளும் என்றும் கணித்தார். இது பரவலாக சர்ச்சையைக் கிளப்பினாலும் கூட அந்தக் கணிப்பை உறுதி செய்யும் வகையில் பாஜக 39% வாக்குகளைப் பெறும் என கருத்துக்கணிப்புகள் உறுதி செய்கின்றன.