5 மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பத்திரங்கள் விற்பனை மூலம் கட்சிகளுக்கு ரூ.695 கோடி நன்கொடை

5 மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பத்திரங்கள் விற்பனை மூலம் கட்சிகளுக்கு ரூ.695 கோடி நன்கொடை
Updated on
1 min read

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்செலவுக்காக தேர்தல் பத்திரம் மூலம் ரூ.695 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு கடன் பத்திரம் மூலம் ரூ.695.34 கோடி அளித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) தெரியவந்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் விற்பனையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதால் அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தன்னார்வ தொண்டு அமைப்பு (என்ஜிஓ) தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரையிலான காலத்தில் எஸ்பிஐ தனது 16-வது தவணை தேர்தல் பத்திரத்தை வெளியிட்டது.

இதில் ஒவ்வொன்றும் ரூ.1 கோடி முக மதிப்புள்ள பத்திரங்கள் விற்பனை மூலம் ரூ.671 கோடி வசூலானதாகவும், ரூ.10 லட்சம் முக மதிப்புள்ள பத்திரங்கள் மூலம் ரூ.23.70 கோடி வசூலானதாகவும், ரூ.1 லட்சம் முக மதிப்புள்ள பத்திரங்கள் மூலம் ரூ.64 லட்சம் வசூலானதாகவும் கமடோர் லோகேஷ் கே பாத்ரா (ஓய்வு) என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவுக்கு எஸ்பிஐ தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தனி நபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இந்தக் கடன் பத்திரங்களை வாங்கி அதை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளிக்கலாம்.

இவ்விதம் கடன் பத்திரங்களை வாங்கும் நபர் மற்றும் தொழில் நிறுவனங்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். உயர் நீதிமன்றம் அல்லது புலனாய்வு அமைப்புகள் விசாரணைக்குக் கோரும் பட்சத்தில் இவை தெரிவிக்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் தங்களது கரன்ட் அக்கவுண்ட் கணக்கில் இந்த பத்திரங்களை பணமாக்கிக்கொள்ள முடியும்.

ரூ.1,000, ரூ.10 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடிமுக மதிப்பில் இந்த பத்திரங்கள் வெளியிடப்பட்டன. 2018-ம் ஆண்டு தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு ரூ.10,56.73 கோடியை அளித்துள்ளன. 2019-ம் ஆண்டு இது 5,071.99 கோடியாகவும், 2020-ம் ஆண்டில் ரூ.363.96 கோடியாகவும் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in