Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிக்கான இணையதள பதிவு தொடக்கம்; ஒரு நிமிடத்தில் 27 லட்சம் பேர் முயன்றதால் சர்வர் முடங்கியது: நாடு முழுவதும் இளைஞர்கள், நடுத்தர வயதினர் ஆர்வம்

புதுடெல்லி

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது. ஒரு நிமிடத்தில் 27 லட்சம் பேர் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியதால் சம்பந்தப்பட்ட ‘கோவின்' வலைப்பக்கத்தின் (வெப் சைட்) ‘சர்வர்' சில நிமிடங்கள் முடங்கியது.

இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றில் கோவாக்சின் தடுப்பூசியானது இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத் தாலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தின் கோவிஷீல்டு தடுப்பூசி சீரம் நிறு வனத்தாலும் தயாரிக்கப்பட்டு வரு கின்றன. பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி இந்தியாவில் தடுப்பூசி செலுத் தும் பணி தொடங்கியது. அப்பொழுது மருத்துவர்கள், செவிலியர்கள், போலீ ஸார் உள்ளிட்ட முன்களப் பணியாளர் களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், அதன் தொடர்ச்சியாக 45 வயதுக்கு மேற்பட்ட மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கும் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸின் இரண்டாவது அலை வேக மெடுக்க தொடங்கியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 1 லட்சமாக இருந்து வந்த சூழலில், தற் போது 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோ ருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. கரோனாவுக்கு உயிரிழப்போரின் விகி தமும் அதிகரித்து வருகிறது.

இதனைக் கருத்தில்கொண்டு, கரோனா தடுப்பூசிகளை அனைவரும் செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கு மாறு மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்து வந்தன. இவற்றை பரிசீலித்த மத்திய அரசு, மே 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அண்மையில் அனுமதி வழங் கியது. இதன் தொடர்ச்சியாக, இதற் கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது.

அதன்படி, தடுப்பூசி செலுத்த ஆர்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் ‘கோவின்' வலைப் பக்கத்துக்குள் https://www.cowin.gov.in/home என்ற இணைய முகவரி வழியே சென்று முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்கான முன்பதிவு ஏப்ரல் 28-ம் தேதி (நேற்று) மாலை 4 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை முன் பதிவு நேரம் நெருங்கியதும், லட்சக்கணக்கானோர் ‘கோவின்' வலைப்பக்கத்துக்குள் செல்ல முயன்றனர். நிமிடத்துக்கு 27 லட்சம் பேர் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியதால் அந்த வலைப்பக்கத்தின் ‘சர்வர்' சிறிது நேரம் முடங்கியது. இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வைரலாகின. பின்னர், சிறிது நேரத்தில் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை ‘கோவின்' வலைப்பக்கத்தை கையாளும் மத்திய அரசின் 'ஆரோக்கிய சேது' செயலி வெளியிட்டது. அதில், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் சென்றதால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 'கோவின்' வலைப்பக்கத்தின் ‘சர்வர்' முடங்கியதாகவும், ஒரு சில நிமிடங்களில் அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தது. அதன் பிறகு, அந்த வலைப்பக்கத்தில் ஏராளமானோர் தங்கள் தடுப்பூசிக்கான முன்பதிவு செய்து கொண்டனர்.

இதனிடையே, கோவின் முன்பதிவு தளத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பதிவு செய்து கொள்ளலாம் என்ற பழைய முகப்புப் பக்கமே இருப்பதாகவும், இதனால் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட லட்சக்கணக்கானோர் தடுப்பூசிக்கான முன்பதிவு செய்ய முடியாமல் உள்ளதாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார் கள் வருவதாக கூறப்படுகிறது. அதே போல, ஏராளமான தனியார் மருத்துவ மனைகளில் இதற்கான 'ஸ்லாட்டுகள்' தயாரிக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகி வருகிறது.

கோவிஷீல்டு விலை ரூ.100 குறைப்பு

புதுடெல்லி: மாநில அரசுகளுக்கு விற்பனை செய்யப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை ரூ.100 குறைப்பதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் கரோனா தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசிக்கான விலையை சீரம் நிறுவனம் சமீபத்தில் உயர்த்தியது. அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸ் விலை மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600-க்கு விற்கப்படும் என்று அறிவித்தது.

இதற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. விலையைக் குறைக்குமாறு சீரம் நிறுவனத்தை மத்திய அரசும் கேட்டுக் கொண்டது. இதையடுத்து, மாநில அரசுகளுக்கு விற்கப்படும் கோவிஷீல்டு விலையை ரூ.400-ல் இருந்து ரூ.300 ஆக குறைப்பதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

மக்களுக்கான உதவியாக விலையை குறைத்துள்ளதாகவும் மாநில அரசுகளின் நிதி பல ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தவும் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு எண்ணற்ற மக்களின் உயிர்களை காப்பாற்றவும் இது உதவும் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x