

கரோனா இரண்டாவது அலையில் டெல்லியில் உயிரிழப்பு அதிகரித் துள்ளது. இதற்கு ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் பற்றாக்குறையே காரணம் என புகார் எழுந்துள்ளது.
இந்த சூழலில் டெல்லி பாஜக.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா, டெல்லி காவல் துறை ஆணையரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், “கரோனா தொற்றுக்கும் டெல்லி மருத்துவமனைகளில் நூற்றுக் கணக்கானோர் இறப்பதற்கும் முதல்வர் கேஜ்ரிவாலின் அலட்சியப் போக்கே காரணம். அவரது கவனக் குறைவு, விளம்பரங்களில்ஊழல், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் தொகையில் முறைகேடு ஆகியவை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என கூறியுள்ளார்.
‘இந்து ஈகோ சிஸ்டம்’ எனும் அமைப்பின் நிர்வாகியாக உள்ள கபில் மிஸ்ரா இந்தப் புகாரை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார்.
புகாருக்கு ஆதாரமாக டெல்லிஉயர் நீதிமன்றத்தில் ஐனாக்ஸ்நிறுவனம் அளித்த வாக்குமூலத்தின் நகலை அவர் இணைத்துள்ளார். இதில், ஜெய்ப்பூர் கோல்டன், பத்ரா ஆய்வகம், கங்காராம் ஆகிய மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜனை முதல்வர் கேஜ்ரிவால் மாற்றி விட்டதால் தான் அங்கு உயிர்ப் பலிகள் ஏற்பட்டதாக கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.
இதன் மீது டெல்லி காவல் துறை அதிகாரிகள் பூர்வாங்க விசாரணையை தொடங்கி யுள்ளனர். இதில் வழக்கு பதிவு செய்யப்படா விட்டால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் கபில் மிஸ்ரா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவாக 2015 முதல் 2017 வரை இருந்த கபில் மிஸ்ரா அமைச்சராகவும் பதவி வகித்தார். ஊழல் புகாரால் பதவி நீக்கப்பட்ட இவர், 2019-ல் பாஜகவில் இணைந்தார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் டெல்லியில் மதக்கலவரம் தொடங்க இவர் காரணம் என புகார் எழுந்தது.
ஆளுநருக்கு இனி அதிகாரம்
யூனியன் பிரதேச மான டெல்லியின் நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் ‘என்சிடி அரசு சட்டத் திருத்தம் 2021’ அமலுக்கு வந்துள்ளது. இது, ஏப்ரல் 27 முதல் அமலாக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதற்குஆம் ஆத்மி உள்ளிட்ட அனைத்துஎதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன்படி டெல்லியில் இனி எந்தவொரு முக்கிய முடிவையும்துணைநிலை ஆளுநரின் அனுமதியின்றி முதல்வர் எடுக்க முடியாது.