

நாட்டில் உள்ள வாகன ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் புகழ்பெற்ற கனக துர்கையம்மன் கோயில் அருகே மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
அனைத்து துறையிலும் வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றுவதே பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியம். நாட்டின் வளர்ச்சிக்கு தொலைநோக்குப் பார்வை மிக அவசியம். அந்த வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பாக செயல்படுகிறார். அவரது வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக நிற்கும்.
ஆந்திர மாநிலத்தில் 392 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை உட்பட மொத்தம் 1,350 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.50,560 கோடி ஒதுக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, தலைநகர் அமைய உள்ள விஜயவாடாவில் 180 கி.மீ. தூரத்துக்கு வெளிவட்ட சாலை (ஒஆர்ஆர்) அமைக்கப்படும். இதற்காக மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி செலவிடப்படும்.
இதுதவிர, ஏற்கெனவே ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் மாநிலத்தின் சாலை கட்டுமானப் பணிகளுக்காக மொத்தம் ரூ.65 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள வாகன ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் வரை போலியானவை என தெரியவந்துள்ளது. இங்கு ஓட்டுநர் உரிமம் பெறுவது மிகவும் எளிதாக உள்ளது. எனவே, நாடு முழுவதும் வாகன ஓட்டுநர் பயிற்சி மையங்கள் திறக்கப்படும். இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.