

விவசாயிகளின் பிரச்சினை களுக்காக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்திய சரத் ஜோஷி (81) நேற்று காலமானார்.
வயது முதிர்வினால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று காலமானார்.
பொருளாதார, வேளாண் நிபுணர், பத்திரிகையாளர் என பன்முகம் கொண்ட சரத் ஜோஷி, 2004 முதல் 2010 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். அப்போது அவர் 16 நாடாளுமன்ற கமிட்டிகளில் அங்கம் வகித்தார்.
1958 முதல் 68 வரை இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றிய ஜோஷி, அஞ்சல் குறியீட்டு எண் முறைக்கு அடித்தளமிட்டார். சுவிட்சர்லாந்தில் சர்வதேச அஞ்சல் அமைப்பில் உயர் பொறுப்பு வகித்த அவர், 1977-ல் அப்பதவியை உதறிவிட்டு நாடு திரும்பினார். விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக போராடத் தொடங்கினார். 1979-ல் விவசாயிகளுக்காக ‘ஷேத்கரி சங்கதனா’ என்ற அமைப்பை தொடங்கினார். ஊரக பெண்களின் நலனுக்காக ‘ஷேத்கரி மகிளா அகடி’ என்ற அமைப்பையும் நிறுவினார்.
ஜோஷிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.