

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சயீது உடல்நிலையை நிபுணர் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சயீது கடந்த 24-ம் தேதி முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள சயீதுக்கு பிராணவாயு சிகிச்சை தேவைப்படுகிறது. என்றாலும் அவரது உடல்நிலை சீராக உள்ளது. சயீது சுயநினைவுடன் இருக்கிறார். உணவு எடுத்துக்கொள்கிறார். அவருக்கு தொடர்ந்து கிருமி எதிர்ப்பு மருந்து செலுத்தப்படுகிறது. அவரது உடல்நிலையை நிபுணர் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடந்த 24-ம் தேதி முப்தி தனது வீட்டில் இருந்தபோது, காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து தனி விமானம் மூலம் அவர் டெல்லி அழைத்துவரப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முப்தியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதனன்று சென்று பார்த்து நலம் விசாரித்தார். முப்தி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி – பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசின் முதல்வராக முப்தி, கடந்த மார்ச் மாதம் பதவியேற்றார்.