பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவாக்கிகள் வாங்கவும், மேலும் 500 ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கவும் முடிவு: பிரதமர் மோடி உத்தரவு

பிரதமர் மோடி | படம் உதவி: ட்விட்டர்.
பிரதமர் மோடி | படம் உதவி: ட்விட்டர்.
Updated on
2 min read

பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ஒரு லட்சம் போர்ட்டபிள் ஆக்சிஜன் செறிவாக்கிகள் (Portable Oxygen Concentrator) வாங்கவும் , மேலும் 500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த 500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் மாவட்டத் தலைநகரங்களிலும், 2-ம் நிலை நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் அமைக்கப்படும்.

கரோனா வைரஸ் 2-வது அலையால், டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, ஆக்சிஜன் விநியோகத்தை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. நாள்தோறும் 3.50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் உச்சகட்டமாக மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் அல்லல்படுவது அனைவரின் மனதையும் உலுக்குவதாக இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்யவும், உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்தி தேவையான இடங்களுக்கு விரைந்து கொண்டு சேர்க்கவும் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

இதற்காக விமானம் மூலம் ஆக்சிஜன் லாரிகள் கொண்டு செல்லப்பட்டு தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் பிஎம் கேர்ஸ் மூலம் புதிதாக 500 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அரசு மருத்துவமனைகளில் அமைக்கவும், ஒரு லட்சம் போர்ட்டபிள் ஆக்சிஜன் செறிவாக்கிகள் (Portable Oxygen Concentrator) வாங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டில் தேவைப்படும் இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள அமைக்கவும், போர்ட்டபிள் ஆக்சிஜன் செறிவாக்கிகள் (Portable Oxygen Concentrator) வாங்கவும் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவாக்கிகளை விரைவாகக் கொள்முதல் செய்து, கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து 713 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். இப்போது மேலும் 500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்'' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “ஒரு லட்சம் ஆக்சிஜன் செறிவாக்கிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன, மேலும், 500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் பிஎம் கேர்ஸ் மூலம் அமைக்கப்பட உள்ளன.

இவை, மாவட்டத் தலைநகரங்கள், 2-ம் நிலை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு எளிதாக ஆக்சிஜன் கிடைப்பதை மேம்படுத்தும். இந்த 500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களும் டிஆர்டிஓ, சிஎஸ்ஐஆர் சேர்ந்து உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின்படி அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in