

நாடு முழுவதும் கரோானா தடுப்பூசியை 150 ரூபாய்க்கு விற்க வேண்டும். வெவ்வேறு விலை வைக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த நிலையில், இனிமேல் வெளிச்சந்தையில் மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்தது.
தனியார் மருத்துவமனைகள், மாநில அரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம் என்று தெரிவித்தது. 50 சதவீதம் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், வெளிச்சந்தையிலும், 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விலை அளவுக்குக் கட்டுப்பாடு ஏதும் மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை.
இதையடுத்து கோவிஷீல்ட் தயாரிக்கும் சீரம் நிறுவனம் தனது விலை விவரத்தை வெளியிட்டது. அதில், வெளிச்சந்தையில் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 (2 டோஸ்) ஆகவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு விலை நிர்ணயித்து அறிவித்தது.
ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்ஸின் மருந்துக்கான விலையை நேற்று இரவு வெளியிட்டது. இதன்படி, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் விலை ரூ.600 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 ஆகவும் விலை நிர்ணயித்துள்ளது. ஆனால், இரு மருந்து நிறுவனங்களும் மத்திய அரசுக்குத் தங்களின் தடுப்பூசியை ரூ.150க்கு விற்பனை செய்வதாக அறிவித்துள்ளன.
ஒரே தடுப்பூசிக்கு 5 விதமான விலை வைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து, ஒரே சீரான விலை வைக்க வேண்டும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாகத் தடுப்பூசி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயாஸ்கான் மற்றும் 3 சட்டக்கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கடந்த 24-ம் தேதி பொதுநல மனுத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ''தடுப்பூசி என்பது அத்தியாவசியப் பொருட்களாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசியை நிர்வாகம் செய்வதும், பகிர்ந்தளிப்பதும் தனியாரிடம் விடுவதை அனுமதிக்க முடியாது.
இந்த இரு மருந்து நிறுவனங்களும் கரோனா பாதிப்பில் இருக்கும் மக்களிடமும், அதிகரிக்கும் உயிரிழப்பையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். ஒட்டுமொத்த தேசமும் கரோனா அச்சத்தில் பீடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற உயிர் காக்கும் தடுப்பூசிக்கு விலைக் கட்டுப்பாடு அவசியம். இதுபோன்ற விலைக் கொள்ளை, மிரட்டலை அனுமதிக்க முடியாது.
மக்களின் உடல்நலத்தைக் காப்பாற்ற மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் கடமை இருக்கிறது. இதில் வேறுபாடு காட்ட முடியாது. மத்திய அரசு, தனியார் மருத்துவமனைகளுடன் சேர்ந்து மாநில அரசுகளும் வெளிச்சந்தையில் தடுப்பூசியை வாங்க வேண்டும் எனக் கூறுவது சரியல்ல.
தடுப்பூசிக்கான விலையிலும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு இருக்கும். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசே நேரடியாக தடுப்பூசி வழங்கலாம். ஆனால், பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படாமல் போகலாம். அதிகமான விலைக்குத் தடுப்பூசி வாங்கும் நிலை ஏற்படலாம். ஆதலால், தடுப்பூசிக்கு நாடு முழுவதும் ரூ.150 விலை வைக்க வேண்டும். பல்வேறு விலைகளை நீக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.