உ.பி.யின் முராதாபாத்தில் நகைக் கடைகளுக்கு 3 நாட்கள் லாக்டவுன்; தாமாக முன்வந்து அறிவித்த கடை அதிபர்கள்

உ.பி.யின் முராதாபாத்தில் நகைக் கடைகளுக்கு 3 நாட்கள் லாக்டவுன்; தாமாக முன்வந்து அறிவித்த கடை அதிபர்கள்
Updated on
1 min read

கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால், உத்தரப் பிரதேசம் முராதாபாத்தின் தங்க நகைக் கடை அதிபர்கள் தாங்களாக முன்வந்து மூன்று தினங்களுக்குத் தங்களின் நகைக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளனர்.

உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள பெரிய நகரம் முராதாபாத். இங்குள்ள நகைக் கடைகளின் அதிபர்கள், மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவலைச் சமாளிக்க ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளனர். அதன்படி, இன்று (ஏப்ரல் 28) முதல் 30ஆம் தேதி வரையில் மூன்று தினங்களுக்குத் தங்களின் கடைகளை மூடிவைக்க முடிவு செய்துள்ளனர். உ.பி. அரசு சார்பிலும் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்விரண்டு நாட்களும் சேர்ந்து மொத்தம் ஐந்து நாட்களுக்கு முராதாபாத்தின் தங்க நகைக் கடைகள் மூடப்பட்டிருக்கும். இந்த முடிவு நகர எம்எல்ஏவான ரித்தேஷ் குப்தாவின் தலைமையிலான காணொலிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

இதன் மூலம், முராதாபாத்தின் தங்க நகைக் கடை அதிபர்களுக்கு சுமார் மூன்று கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் எக்காரணத்தைக் கொண்டும் வியாபாரம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு இடையே ஒரு நாள் மட்டும் கடைகளைத் திறந்து சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது.

நகைக்கடை அதிபர்கள் தாங்களாக முன்வந்து எடுத்த முடிவுக்கு உ.பி.வாசிகள் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in