

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:
டெல்லி அரசு தாய்லாந்தில் இருந்து 18 ஆக்சிஜன் டேங்கர் களை இறக்குமதி செய்ய முடிவுசெய்துள்ளது. மேலும் பயன்படுத்த தயாராக உள்ள 21 ஆக்சிஜன் ஆலைகளை பிரான்சிலிருந்து இறக்குமதி செய்ய உள்ளோம். இவை டெல்லியின் வெவ்வேறு மருத்துவமனைகளில் நிறுவப்படும். மேலும் இது அந்த மருத்துவமனைகளில் ஆக்சிஜன் நெருக்கடியைத் தீர்க்க உதவும்.
அடுத்த ஒரு மாதத்திற்குள் டெல்லியில் 44 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க உள்ளோம். இவற்றில் 8 மத்திய அரசால் நிறுவப்படுகின்றன. மீதமுள்ள 36 டெல்லி அரசால் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, மத்திய அரசின் சார்பில் தாய்லாந்தில் இருந்து ஆக்சிஜன் டேங்கர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று இந்தியா வந்துள்ளன. இதை உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். ஏற்கெனவே சிங்கப்பூரில் இருந்து கடந்த சனிக்கிழமையும் துபாயில் இருந்து திங்கட்கிழமையும் ஆக்சிஜன் டேங்கர் கள் வந்தது குறிப்பிடத்தக்கது.