மணமகனுக்கு கரோனா வைரஸ் தொற்று- ம.பி.யில் பாதுகாப்பு கவச உடையில் நடந்த திருமணம்

ம.பி.யில் கரோனா பாதுகாப்பு உடையில் திருமணம் செய்துகொண்ட மணமக்கள்.
ம.பி.யில் கரோனா பாதுகாப்பு உடையில் திருமணம் செய்துகொண்ட மணமக்கள்.
Updated on
1 min read

மத்தியபிரதேசத்தில் மணமகனுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடையில் திருமணம் நடந்தேறியது.

ம.பி.யில் ரத்லம் மாவட்டத்தில் இத்திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இது தொடர்பான ஒரு வீடியோவில் மணமக்கள் பாதுகாப்பு கவச உடையில் கழுத்தில் மாலையுடன் அக்னியை வலம் வருவதை காண முடிகிறது. அப்போது வேத மந்திரங்களின் முழக்கத்தை கேட்க முடிகிறது.

இதுகுறித்து நவீன் கார்க் என்ற மாவட்ட அதிகாரி கூறும்போது, “மணமகனுக்கு கடந்த 19-ம் தேதிகரோனா தொற்று உறுதியானது. இதனால் திருமணம் நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் அங்கு சென்றோம். என்றாலும் இரு வீட்டாரின் வேண்டுகோளை தொடர்ந்து உயரதிகாரிகள் வழிகாட்டுதலின்படி திருமணத்தை நடத்த அனுமதி தரப்பட்டது. மணமகன், மணமகள் இருவரும் பாதுகாப்பு கவச உடை அணிந்து திருமணம் செய்துகொண்டனர்” என்றார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ம.பி.யில் திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளது. என்றாலும் ம.பி.யின் பிந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங், புதுமையான யோசனையை அமல்படுத்தி வருகிறார். 10 அல்லது அதற்கும் குறைவான விருந்தினர்களுடன் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களை அவர் தனது வீட்டுக்கு அழைத்துவந்து சுவை யான விருந்து அளிக்கிறார். பிறகு அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார். இதற்காக இந்த மணமக்கள் அரசு வாகனத்தில் அழைத்து வரப்பட்டு, பிறகு அரசு வாகனத்திலேயே வீட்டில் விடப்படுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in