Published : 28 Apr 2021 03:13 am

Updated : 28 Apr 2021 04:42 am

 

Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 04:42 AM

கரோனா சிகிச்சையில் ஒரு புதிய வெளிச்சம்!

covid-treatment

நாட்டில் தற்போது கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தன்னு டைய கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் 2-ம் அலையை எதிர்கொண்டு மீண்டு வருகிற நேரத்தில், இந்தியா இதுவரை கண்டிராத மருத்துவப் போதாமைகளுடன் போராடி வருகிறது.

பல வடமாநில மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்குப் படுக்கைகள் இல்லை; கரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து கிடைக்கவில்லை; நோய் கடுமையானவர்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால்உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியவில்லை. இப்படியான மோசமானதொரு மருத்துவப் பேரிடர் காலத்தில் இந்தத் தேவைகளை எல்லாம் குறைக்கும் விதமாக ஒரு ‘வைரஸ் மருந்து’ சென்ற வார இறுதியில் கரோனாவுக்கான சிகிச்சையில் புகுத்தப்பட்டுள்ள செய்தி கவனிக்கத்தக்கது.


அகமதாபாத்தில் ‘ஜைடஸ் கெடிலா’ நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும் ‘பெகிலேட்டட் இன்டர்ஃபெரான் ஆல்பா - 2பி’ (Pegylated Interferon alpha-2b)எனும் மருந்தை அவசரகாலப் பயன்பாட்டுக்குத் ‘தேசிய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம்’ (Drugs ControllerGeneral of India - DCGI) அனுமதியளித்துள்ளது. இதன் வியாபாரப் பெயர் ‘விராஃபின்’ (Virafin). ‘இன்டர்ஃபெரான்’ எனும் தடுப்புப் புரதத்தை ‘மரபணு பொறியியல்’ தொழில்நுட்பத்தில் செயற்கையாகத் தயாரித்து, ‘பாலிஎத்திலின் கிளைக்கால்’ எனும் வேதியுடன் இணைத்து அதன் கூட்டுப்பொருளை மருந்தாகப் பயன் படுத்தும் செயல்முறை கொண்டது, ‘பெகிலேட்டட் இன்டர்ஃபெரான் ஆல்பா - 2பி’.

வைரஸ் எதிர்ப்பு மருந்து

‘இன்டர்ஃபெரான் ஆல்பா - 2பி’ ஒரு ‘வைரஸ் எதிர்ப்பு மருந்து’ எனும் அளவில், இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக ‘சி’ வகை கல்லீரல் அழற்சி (Hepatitis-C) நோய்க்குக் கொடுக்கப்படுகிறது. இப்போது இதே மருந்து கரோனா நோயாளிகளுக்கும் பயன்படுவதாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு கட்ட ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு இது வயது வந்தவர்களுக்கு மட்டும் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு இதைப் பயன்படுத்த முடியாது. கரோனா முதல் அலை ‘க்யூபா’வில் பரவத் தொடங்கியபோதே அங்கு இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது என்பது இதன் பயன்பாட்டுக்கு ஒரு வரலாற்றுச் சான்று.

நம் தடுப்பாற்றல் மண்டலத்தில் வெள்ளையணுக்கள் உற்பத்தி செய்யும் வைரஸ் தடுப்புப் புரதங்களில் ‘இன்டர்ஃபெரான்’ என்பதும் ஒன்று. நம் செல்களுக்குள் நாவல் கரோனா வைரஸ் நகலெடுத்து வளர்வதைத் தடுக்கும் ‘சிறப்புக் காவல்படை’ என்று இதைச் சொல்லலாம். கரோனா வைரஸ் உடலுக்குள் நுழைந்ததும் பிரதான வேலையாக வெள்ளையணுக்களை வீழ்த்தி ‘இன்டர்ஃபெரான்’ உற்பத்தியைக் குறைத்துவிடுகிறது. அதேநேரம், முதியவர்களுக்கு இயல்பாகவே ‘இன்டர்ஃபெரான்’ உற்பத்தி குறைவாக இருக்கும். இந்தக் காரணங்களால், இவர்களுக்கு கரோனா பாதிப்பது சுலபமாகிவிடுகிறது.

இந்த நோயாளிகளுக்கு ‘இன்டர்ஃபெரான் ஆல்பா - 2பி’ மருந்தைக் கொடுத்ததும் தோற்றுப்போன நம் உடலின் ‘காவல் படை’க்கு ‘ராணுவ பலம்’ வந்துவிடுகிறது. இப்போது நடக்கும் 2-ம்கட்டப் போரில் கரோனா நோயாளிகள் ஜெயித்துவிடுகின்றனர். இந்த மருந்து கரோனா வைரஸ்களை நகலெடுக்க முடியாமல் தடுத்து அவற்றின் இறப்புக்கு வழி செய்துவிடுவதுதான் காரணம்.

என்னென்ன நன்மைகள்?

இது தோலுக்கு அடியில் செலுத்தப்படும் ஊசி மருந்து. ஒரு தவணை மட்டும் செலுத்தினால் போதும். இந்தச் சிகிச்சைக்கு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. கரோனா தொற்றை உறுதி செய்தவுடன் இதைச் செலுத்திக்கொண்டால் நல்ல பலன் தருகிறது. இன்னும் குறிப்பாகச் சொன்னால், ஆக்சிஜன் செறிவு அளவு 94 – 90% உள்ள மிதமான கரோனா நோயாளிகளுக்கு இது பயன்படுகிறது. இதைச் செலுத்திக்கொண்ட ஒரு வாரத்தில் கரோனா வைரஸ்களின் எண்ணிக்கை அவர்கள் ரத்தத்தில் வெகுவாகக் குறைந்துவிடுகிறது. இந்த மருந்து எடுத்துக் கொண்டவர்களில் 91.5% பேருக்கு 7-ம் நாளில் ‘ஆர்.டி.பி.சி.ஆர்.’ சளிப் பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியாகிவிடுகிறது. மேலும் இவர்களுக்கு அதுவரை தெரிந்த நோய் அறிகுறிகள் மறைந்து சிரமங்கள் குறைந்துவிடுகின்றன.

முக்கியமாக, இவர்கள் மூச்சுத்திணறல், உடற்சோர்வு உள்ளிட்ட நோயின்தீவிரத் தன்மை கொண்ட அடுத்தகட்டத்துக்குச் செல்வதில்லை என்பது இந்த மருந்தின் கூடுதல் நன்மை. பொதுவாக, நோயின் தீவிர நிலைமையில் உள்ளவர்களுக்கு ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து தரப்படும் ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்து இவர்களுக்குத் தேவைப்படுவதில்லை. ஓர் ஒப்பீட்டளவில் சொன்னால் இதற்கான செலவும் குறைவு. ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு ஆகும் மொத்த செலவு 35,000 ரூபாய் என்றால், ‘இன்டர்ஃபெரான் ஆல்பா - 2பி’ மருந்துக்கு 9,000 ரூபாய் மட்டுமே.

‘ரெம்டெசிவிர்’ தேவையை குறைக்கும்!

மேலும், தற்போது ‘ரெம்டெசிவிர்’ மருந்து பல மருத்துவமனைகளிலும் மருந்துச் சந்தையிலும் கிடைக்காத காரணத்தால் பொதுச்சமூகத்தில் ஒரு பீதி கலந்த அச்சமும் கவலையும் பரவி வருகிறது. அதேநேரத்தில், எல்லாகரோனா நோயாளிகளுக்கும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து தேவையில்லை என்றும் சுகாதாரத்துறையினர் அறிவித் துள்ளனர். இந்தப் பின்னணியில், ‘இன்டர்ஃபெரான் ஆல்பா - 2பி’ மருந்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது ‘ரெம்டெசிவிர்’ மருந்தின் தேவையையும் குறைக்கும்.

ஆக்சிஜன் தேவையில்லை!

இன்னுமொரு முக்கியமான நன்மை என்னவென்றால், ‘இன்டர்ஃபெரான் ஆல்பா - 2பி’ மருந்து எடுத்துக் கொண்டவர்களில் 100 பேரில் 80 பேருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. மீதி 20% நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அவசியப்பட்டாலும் மிகவும் குறைந்த அளவிலும் குறைந்த காலத்துக்கும்தான் அது தேவைப்படுகிறது.

கரோனாவைப் பொறுத்தவரை இன்றைய தினம் மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பவை நோயாளிகளின் சுவாசப் பிரச்சினையும் அதனால்ஏற்படும் சுவாசச் செயலிழப்பு மரணங்களும்தான். அதிலும் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு மருத்துவர்களுக்கு இன்னும் சுமையைக் கூட்டிவிட்டிருக்கிறது. இதனால், இந்திய மருத்துவர்களுக்குச் சரியான ஆயுதம் இல்லாமல் போராடும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ‘இன்டர்ஃபெரான் ஆல்பா - 2பி’ கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையைக் குறைத்து, நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி விடுகிறது என்பதால் இதன் அவசரகாலப் பயன்பாடு நோயாளிகளைக் காப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவர்களின் பணிச்சுமையையும் குறைக்க உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுகளின் கடமை

அதேநேரத்தில், இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவத்தொடங்கி ஓராண்டு முடிந்துள்ள நிலையிலும், தகுந்த முன்னெடுப்புகள் இல்லாமல் ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கும் ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதுபோல் இந்தமருந்துக்கும் நேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாட்டின் மருந்து தயாரிப்பு மற்றும் விநியோகச் செயல்முறையில் சரியான செயல்திட்டங்களைநுழைத்து, இதன் தயாரிப்பை வேகப்படுத்தியும், நாடு முழுவதிலும் இதன் விநியோகத்தை முறைப்படுத்தியும், சாமானியர்களுக்கும் எட்டும்விதமாக இதன் விலையை நிர்ணயித்தும், கறுப்புச் சந்தையில் அதிக விலையில் கிடைப்பதைத் தடுத்தும் தற்போதைய கரோனா பேரிடரால் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் விலை மதிப்பற்ற உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு களின் கடமை.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்பு இளைஞர்களும் நடுத்தர வயதினரும் கவனிக்க!

பொதுவாக, நாட்டில் இளம் வயதினரும் நடுத்தர வயதினரும்தான் ரத்த தானம் செய்ய முன்வருவார்கள். இப்போது மே ஒன்றாம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட இருக்கிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு70 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது. நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக இந்தத் தடுப்பூசித் திட்டம் செயல்பட இருப்பதால் ரத்த வங்கிகளுக்கு அடுத்த 2 - 3 மாதங்களுக்கு ரத்தம் கிடைப்பது குறைந்துவிடும். அப்போது உயிர் காக்கும் சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் ரத்தம் கிடைக்காமல் போய்விடும். அதனால், தகுதியான ரத்தக் கொடையாளர்கள் அனைவரும் – 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் - முதலில் ரத்ததானம் செய்துவிட்டு, அடுத்ததாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால், இந்த நிலைமையைச் சமாளிக்க முடியும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.comகரோனா சிகிச்சைபுதிய வெளிச்சம்Covid treatmentகரோனா வைரஸ்இரண்டாம் அலை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x