

பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவோம் என்பது சிறந்த நகைச்சுவை என்று இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
கருப்பு பண நடவடிக்கைகளை தடுக்க அரசிடம் தெளிவான கொள்கை இல்லை. இதற்கு சரியான சட்டமோ, புலனாய்வு திறனோ இல்லை. இந்த நடவடிக்கைகளில் ஈடுபவர்களை சிறையில் அடைப்பதும் இல்லை. கருப்பு பணவிவகாரத்தில் மத்திய அரசு தோற்றுவிட்டது. தற்போது இருக்கும் சட்டத்தின் மூலம் கருப்பு பண நடவடிக்கையை தடுக்க முடியாது. தற்போதைய சட்டத்தின்படி யாரும் 60 சதவீத வரி செலுத்த மாட்டார்கள்.
சிறப்பான புலனாய்வு திறன், சிறப்பான வழக்கு நடைமுறைகள் மூலம் வழக்கை முடிப்பது ஆகியவை நடைபெறாத வரையில் கருப்பு பண நடவடிக்கைகளை குறைக்க முடியாது. உங்களுக்காக கருப்பு பணம் காத்திருக்காது. கருப்பு பணம் எங்கு இருக்கிறது என்பதை அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும்.
அரசாங்கதிடம் சிறப்பு புலனாய்வு துறை இருந்தாலும், அதில் ஊழல் இருக்கிறது. கருப்பு பண நடவடிக்கைகளில் ஈடுபவர்கள் மீது அதிக பட்சம் ஆறு மாதங்களில் வழக்கு நடத்தி அவர்களுக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும். இதனை செய்யாத வரையில் கருப்பு பண நடவடிகையை குறைக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.