

நாட்டில் நிலவும் கரோனா வைரஸ் தொடர்பான சிக்கல்களை மவுனமாக வேடிக்கை பார்க்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்தது.
அதே நேரம், கரோனா வைரஸ் பிரச்சினையைச் சமாளிக்க தேசிய அளவில் கொள்கை தேவை என்று நாங்கள் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கு, மாநில உயர் நீதிமன்ற விசாரணையை ஒருபோதும் பாதிக்காது எனத் தெரிவித்தது.
நாட்டில் கரோனா 2-வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மூச்சுத் திணறலால் அவதிப்படுவோருக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜன் மற்றும் வைரஸை எதிர்த்துப் போராடும் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து 6 உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குத் தொடர்ந்துள்ளதற்கு சில வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். கடந்த 23-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே கூறுகையில், “வழக்கறிஞர்கள் விமர்சிப்பது நியாயமற்றது. நாங்கள் வழக்காகப் பதிவு செய்திருப்பது என்பது, கரோனா பிரச்சினையைச் சமாளிக்க தேசிய அளவில் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திர பாட் அமர்வில் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டது.
அப்போது, மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். “அதில் தடுப்பூசிக்கு 5 விதமான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையை ஒரே மாதிரியாக நிர்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அப்போது நீதிபதிகள் அமர்வு, மாநிலங்களுக்கு ஆக்சிஜன், தடுப்பூசி பகிர்மானம், கண்காணிப்பு முறை ஆகியவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர்கள் ஜெய்தீப் குப்தா, மீனாட்சி அரோரா ஆகியோரை நீதிபதிகள் நியமித்தனர்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், “நாட்டில் கரோனா வைரஸ் அதிகரித்து அதனால் பல பிரச்சினைகள், சிக்கல்கள் உருவாகும்போது அதை மவுனமாக வேடிக்கை பார்க்க முடியாது. மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள் சிறந்த நிலையில் செயல்படுகின்றன. வழக்குகளையும், தங்கள் எல்லைக்கு உட்பட்டு கரோனா சூழலையும் சிறப்பாகக் கண்காணிக்கின்றன.
இதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு துணையாக இருப்பது மட்டும்தான். பிராந்திய எல்லைகளை மீறிச் சில செயல்பாடுகள் இருப்பதால் எங்கள் தலையீட்டைச் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் தலையீடு என்பது சில தேசிய விவகாரங்களிலும், மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல் ஏற்படும்போது மட்டும்தான். எல்லைகள் தொடர்பான விவகாரங்களைக் கையாளும்போது உயர் நீதிமன்றங்களுக்கு ஏதேனும் கஷ்டம் இருந்தால் நாங்கள் உதவுவோம்” எனத் தெரிவித்தார்.