கரோனா; டெல்லியில் 10 ஏக்கரில் கூடுதலாகத் தகன மேடைகள், 2 அடக்கஸ்தலங்கள் அமைப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கரோனா தாக்கத்தால் டெல்லியில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 10 ஏக்கரில் கூடுதலான தகன மேடைகள், 2 அடக்கஸ்தலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை டெல்லியில் அதிகமாகி உள்ளது. இதனால், அங்குள்ள தகன மேடைகளிலும், அடக்கஸ்தலங்களிலும் இறந்தவர்களின் உடல்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால் பல மணி நேரங்கள் தாமதமாவதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதைச் சமாளிக்க டெல்லியின் வடக்கு மாநகராட்சி நிர்வாகம் தன் நிர்வாகத்தின் கீழ் உள்ள மங்கோல்புரியில் புதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அதன்படி, அப்பகுதியில் ஐந்து ஏக்கரில் புதிதாக இந்துக்களுக்காகத் தகன மேடைகள் அமைக்கப்படுகின்றன. 3 மற்றும் 2 ஏக்கரில் முறையே முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்காக அடக்கஸ்தலங்களும் அமைகின்றன.

இதுகுறித்து வடக்கு டெல்லி மாநகராட்சியின் மேயரான ஜெய்பிரகாஷ் கூறும்போது, ''கரோனா சூழல் முற்றிலுமாக மாறி இறப்புகள் கூடிவிட்டன. உறவுகளை இழந்ததோடு அல்லாமல் அவர்களுக்கான இறுதிச் சடங்குகளுக்காகவும் பொதுமக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதைப் போக்க மொத்தம் பத்து ஏக்கரில் தகன மேடைகள், அடக்கஸ்தலங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக டெல்லி வளர்ச்சி ஆணையம் சார்பிலும் மூன்று ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

வடக்கு டெல்லி பகுதியில் ஏற்கெனவே, ஏழு தகன மேடைகளும், இரண்டு அடக்கஸ்தலங்களும் அமைந்துள்ளன. எனினும், அவற்றில் போதிய இடமில்லாததால், புதிய ஏற்பாடுகள் அவசியமாகி உள்ளன. அவை இன்று (ஏப்ரல் 27) முதல் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை, தெற்கு மாநகராட்சியிலும் நிலவுகிறது.

இதைச் சமாளிக்க தெற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெல்லியின் சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்திற்கு நிலம் கேட்டுக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. வஃக்பு வாரியத்திற்குச் சொந்தமாக டெல்லியின் தென் பகுதியில் ஏராளமான காலி நிலம் இருப்பது அதன் காரணம்.

இப்பகுதியில் உள்ள சில தகன மேடைகள் மற்றும் அடக்கஸ்தலங்களை ஒட்டி பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ளன. இதனால், அவர்கள் கரோனா பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை அங்கு செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in