

டெல்லிக்கு விநியோகம் செய்யப்படும் ஆக்சிஜன் சப்ளையைக் குறைத்துள்ளது மத்திய அரசு. மேலும் ஐநாக்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை ஆக்சிஜன் உற்பத்தி உத்திரப்பிரதேசத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஐநாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் ‘‘மத்திய அரசிடமிருந்து வரும் உத்தரவும், டெல்லி அரசிடமிருந்து வரும் உத்தரவும் முரணாக இருக்கிறது. 125 மெட்ரிக்டன் ஆக்சிஜன் வழங்குமாறு டெல்லி அரசு கேட்கிறது. ஆனால் 80 மெட்ரிக் டன் வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிடுகிறது. இந்த முரண் நிறுவனத்தின் முடிவுகளில் பெரும் சிக்கலை உருவாக்குவதாக இருக்கிறது.
தற்போது டெல்லிக்கு வழங்கப்பட்டுவந்த 105 மெட்ரிக் டன் ஆக்சிஜன் 80 மெட்ரிக் டன்னாக குறைத்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் பானிபட்டுக்கு 80 மெட்ரிக் டன் ஏர் லிக்விட் அனுப்புவதற்கான உத்தரவும் வந்திருக்கிறது.
இதனால் தற்போது உற்பத்தி மட்டுமல்லாமல் போக்குவரத்தும் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறோம்’’ என்று ஐநாக்ஸ் நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் ஜெயின் கூறியுள்ளார்.
மொத்தமாக டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனில் 300 மெட்ரிக் டன் மட்டுமே பெறுகிறது. இந்தப் பற்றாக்குறையால் டெல்லி மருத்துவமனைகளிலிருந்து அவசர அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
சரியான உத்தரவு வேண்டும்
கடந்த ஏழு நாட்களாக உறக்க மில்லாமல் வேலை செய்துகொண்டிருக்கிறோம். தெளிவான, சரியான உத்தரவு வந்தால்தான் மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்படாதவாறு ஆக்சிஜன் விநியோகம் செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஆக்சிஜன் ஏற்றி செல் லும் வாகனங்களும் இடையில் திசைதிருப்பப்படுகின்றன. ஹரியாணாவுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களை ராஜஸ்தான் கைப்பற்றிக்கொள்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.