

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து ஆத்திரமடைந்துள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நான்காவது நாளாக நேற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
நேஷனல் ஹெரால்டு வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறி அவர்கள் கோஷமிட்டனர்.
அவை கூடியதும், நாடாளுமன்றத்தின் மீதான தீவிரவாத தாக்குதல் நடந்த 14-வது ஆண்டு தினத்தை அவைத் தலைவர் ஹமீது அன்சாரி குறிப்பிட்டார்.
பின்னர், சில காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையத்துக்கு வந்து அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். பிரதமர் மோடியின் ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரத்தை சகித்துக் கொள்ள முடியாது எனக் கூறி கோஷமிட்டனர்.
காங்கிரஸ் உறுப்பினர் பாஸ்கர் ரபோலு இருக்கைக்கு திரும்ப மறுத்து தொடர் அமளியில் ஈடுபட்டதுடன், நாடாளுமன்ற நிலைக்குழுவின் எரிசக்தி மீதான அறிக்கையை சமர்ப்பிக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து, பாஸ்கருக்கு அடுத்து உள்ள உறுப்பினரான பிஜு ஜனதா தள எம்.பி. பிராரிமோகன் மஹாபாத்ராவை அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அழைத்தார். ஆனால் அவர் அவைக்கு வரவில்லை.
இந்த அமளிக்கிடையே, ஊழல் தடுப்பு சட்ட திருத்த மசோதா -2013 தேர்வுக்குழுவுக்கு அனுப்பும் பரிந்துரை நிறைவேறியது.
மேலும், திரிணமூல், மார்க்சிஸ்ட் உறுப்பினர்களின் சகிப்பின்மை, தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை, கேரள ரப்பர் விவசாயிகளின் பிரச்சினை ஆகியவை குறித்த சிறப்பு நோட்டீஸ்கள் தாக்கல் செய்யப்பட்டன.
காங்கிரஸ் உறுப்பினர்கள் ஊளையிட்டனர். ஊளையிடுவது மனிதர்களின் இயல்பல்ல என அவைத்தலைவர் கூறியும் அவர்கள் நிறுத்தவில்லை.
அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “நாம் கேட்கும் கூச்சல்கள், விலங்கு காட்சியகத்தில் கேட்பது போல் இருக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது. ஒருவாரமாக கோஷம் எழுப்பியவர்களால், தற்போது ஊளையிட மட்டுமே முடிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு மருந்து வாங்கிக் கொடுத்தால், அவர்களின் குரல்வளை சரியாகிவிடும்” எனக் கிண்டலடித்தார்.
அமளி காரணமாக அவை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை கூடிய பின் மீண்டும் அமளி நிலவியதால் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகும் நிலைமை சீரடையவில்லை.
கேள்வி நேரத்தை நடத்த விடும்படி அவைத்தலைவர் கேட்ட போதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலிட்டபடியே இருந்தனர். பின்னர் 12.30 வரையும், அதைத் தொடர்ந்து 2.30 வரையும் அவை ஒத்தி வைக்கப்பட்டதால் கேள்வி நேர அலுவல் நடைபெறவே இல்லை.