

சொந்த ஊர், பணியிடம் என இரண்டு இடங்களில் வாக்களியுங்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
அவரது பேச்சு தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுமை தூக்கும் தொழிலாளர்கள் மாநாடு நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற தொழிலாளர்களில் பலர் மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இதை மையமாக வைத்து சரத் பவார் பேசியதாவது:
2009 மக்களவைத் தேர்தலின் போது சதாரா, மும்பைக்கு ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது. இதனால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் சதாராவுக்கு வாக்களிக்கச் சென்றுவிட்டார்கள்.
இந்தமுறை சதாராவில் ஏப்ரல் 17-ம் தேதியும் மும்பையில் ஏப்ரல் 24-ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முதலில் சதாராவில் கடிகாரம் சின்னத்தில் (தேசியவாத காங்கிரஸ் சின்னம்) வாக்களியுங்கள். பின்னர் மும்பைக்கு வந்து மீண்டும் கடிகாரம் சின்னத்தில் வாக்களியுங் கள். அதற்கு முன்பாக உங்கள் விரலில் இடப்படும் மையை கண்டிப்பாக அழித்துவிடுங்கள் என்று சரத் பவார் கூறினார்.
தேர்தல் ஆணையத்திடம் புகார்
சரத் பவாரின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப் போம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில ஆம் ஆத்மி தலைவர் பிரீத்தி மேனன் கூறியபோது, பவாரின் பேச்சு ஜனநாயக விரோதமானது. அவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுத உள்ளோம் என்று தெரிவித்தார்.
பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு
இந்திய குடியரசுக் கட்சி தலைவர் ராமதாஸ் அத்வாலே மும்பையில் நிருபர்களிடம் கூறிய போது, கள்ள ஓட்டு போடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேச்சை கடுமையாக ஆட்சேபிக்கிறோம். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித் தார்.
இதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகளும் சரத் பவார் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.