

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து 406 பேருக்கு 30 நாட்களில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. வைரஸ் பாதித்த ஒருவரிடமிருந்து போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருத்தல் போன்ற காரணங்களால் இது நிகழ வாய்ப்புள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
வீடுகளில் இருக்கும்போது கூட முகக்கவசம் அணிதல், கைகளில் கையுறை அணிதல், போதுமான காற்று வசதி இல்லாத இடங்களைத் தவிர்த்தல், கைகளை அடிக்கடி கழுவுதல், சானிடைசரை பயன்படுத்துதல் போன்றவற்றை மக்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறும்போது, “தொற்றால் பாதிக்கப்பட்டு தேவைப்படும் நபர்களுக்கு மட்டுமே மருத்துவமனைகள் ஆக்சிஜனை வழங்க வேண்டும். மேலும் ரெம்டெசிவிர், டாக்சிலிசுமாப் போன்ற மருந்துகளை டாக்டரின் மருந்துச் சீட்டு இல்லாமல் பொது மக்களுக்குக் கொடுக்கக் கூடாது. நமது உடலில் ஆக்ஸிமீட்டர் கொண்டு பரிசோதிக்கும்போது 94 சதவீதத்துக்கும் அதிகமாக ஆக்சிஜன் அளவைக் காட்டினால் மக்கள் பயப்படத் தேவையில்லை” என்றார்.