

மத்திய அரசு விவாதித்தது போதும். தேசத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. தடுப்பூசி நிறுவனங்களே விலை வைக்கவும் அனுமதித்தது.
இதன்படி, சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்ட் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150 விலையிலும், மாநில அரசுகளுக்கு ரூ.400 விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது.
அதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்ஸின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150 விலையிலும், மாநில அரசுகளுக்கு ரூ.600 விலையிலும், தனியாருக்கு ரூ.1200 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது.
தடுப்பூசிகள் அனைத்துக்கும் ஒரே மாதியான விலை வைக்க வேண்டும், 5 விதமான விலை இருக்கக்கூடாது, மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி வழங்கிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், “கரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் விவாதித்தது போதும். நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பாஜகவின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலிகடா ஆக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.