

கரோனா விதிமுறைகளை பின்பற்றி தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டு என 7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் மேற்குவங்க மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 34 தொகுதிகளுக்கு 7-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது எம்எல்ஏவாக இருக்கும் தொகுதியான பபானிபூர் தொகுதி உள்ளிட்ட தொகுதிகளில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்படுகிறது. கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடுமையான கரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில் ‘‘மேற்குவங்க மாநிலத்தில் 7-வது கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றி தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.