ஜனவரி 13 முதல் 24 வரை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ-வில் பொங்கல் புத்தக திருவிழா

ஜனவரி 13 முதல் 24 வரை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ-வில் பொங்கல் புத்தக திருவிழா
Updated on
1 min read

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜனவரி 13 முதல் 24-ம் தேதி வரை பொங்கல் புத்தக திருவிழா நடைபெறும் என தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

வரும் ஜனவரி 13 முதல் 24-ம் தேதி வரை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை பொங்கல் புத்தக திருவிழா நடைபெறவுள்ளது. தமிழ் நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் நடைபெறும் இந்த திருவிழாவில் 200-க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

பெரு வெள்ளத்தால் மன ரீதியாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களை மீட்டெடுக்க இந்தப் புத்தக திருவிழா ஒரு வடிகாலாக அமையும். மழை, வெள்ளத்தால் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நூல்களையும், பொருள்களையும் இழந்து வாடும் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு இந்த திருவிழா மூலம் கிடைக்கும் வருவாய் சிறிது ஆறுதலாக இருக்கும்.

இந்த கண்காட்சியில் வழக்கம் போல 10 சதவீத சிறப்பு கழிவு வழங்கப்படும். நுழைவுச்சீட்டு நன்கொடை ரூ. 5. இதில் கிடைக்கும் தொகை முழுவதும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். வேலை நாள்களில் மதியம் 2 முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாள்களில் காலை 11 முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும்.

இவ்வாறு ஆர்.எஸ்.சண்முகம் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in