பிஎம் கேர்ஸ் நிதியில் அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்: பிரதமர் மோடி உத்தரவு
பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து அரசு மருத்துவமனைகளில் 550 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் 2-வது அலையால், டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, ஆக்சிஜன் விநியோகத்தை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அ ரசு எடுத்துள்ளது.
நாட்டி்ல கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. நாள்தோறும் 3.50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் உச்ச கட்டமாக மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் அல்லல்படுவது அனைவரின் மனதையும் உருக்குவதாக இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்யவும், உள்நாட்டில் உற்பத்தியை அதிகப்படுத்தி தேவையான இடங்களுக்கு விரைந்து கொண்டு சேர்க்கவும் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இதற்காக விமானம் மூலம் ஆக்சிஜன் லாரிகள் கொண்டு செல்லப்பட்டு தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் பிஎம் கேர்ஸ் மூலம் புதிதாக 550 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அரசு மருத்துவமனைகளில் அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அரசு மருத்துவமனைகளில் 550 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதற்காக பிஎம் கேர்ஸ் நிதியியலிருந்து நிதி ஒதுக்கவும் முறையான ஒப்புதல் அளி்க்கப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை விரைவாக அமைத்து, விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் மூலம் மாவட்ட அளவில் ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கச் செய்ய முடியும். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.
இதற்கான கொள்முதல் பணிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவனிக்கும்.
இதற்கு முன் ரூ.201.58 கோடி மதிப்பில் 162 பிஎஸ்ஏ மருத்துவஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிஎம் கேர்ஸ் நிதி ஒதுக்கீடு செய்தது. இதேபோன்ற மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையத்தைத்தான் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுகாதாரத்துறை வலுப்பெறும், நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியும் அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
