ஜேட்லி மீதான புகார் குறித்து பேச அனுமதி மறுத்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு

ஜேட்லி மீதான புகார் குறித்து பேச அனுமதி மறுத்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு
Updated on
1 min read

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மீதான ஊழல் புகார் குறித்து பேச அனுமதி மறுத்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அவையின் மையப்பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள அருண் ஜேட்லி பதவி விலக வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தினர்.

ஆனால், அடுத்ததாக பூஜ்ய நேரத்தின்போது இந்தப் பிரச்சினையை எழுப்ப வேண்டும் என்பதற்காக அவர்கள் மீண்டும் தங்கள் இருக்கைக்கு சென்று அமர்ந்தனர். பூஜ்ய நேரம் தொடங்கியதும், காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் இந்தப் பிரச்சினையை எழுப்ப முன்வந்தார்.

ஆனால் இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய நாடாளு மன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறும்போது, “அனைவருக்கும் சமமான நீதி வேண்டும். கேள்வி நேரத்துக்கு இடையூறாக ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், இப்போது தங்கள் பிரச்சினை குறித்து பேச இருக்கைக்கு சென்றுள்ளனர். இதை மக்களவைத் தலைவர் அனுமதிக்கக்கூடாது” என்றார்.

இதையடுத்து, முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்கப்படாத விவகாரம் குறித்து பேச அனுமதிக்க முடியாது என மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாட்டு நலனில் அக்கறை இல்லை

முன்னதாக, கேள்வி நேரத்தின் போது பாதுகாப்பு தொடர்பாக முக்கிய கேள்வி எழுப்ப வேண்டி இருப்பதால், நாட்டு நலன் கருதி காங்கிரஸ் உறுப்பினர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிஜு ஜனதா தள உறுப்பினர் வைஜயந்த் பாண்டா தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் சுமித்ரா மகாஜன் கூறும்போது, “அவர்களுக்கு (காங்கிரஸ்) நாட்டு நலனில் அக்கறை இல்லை. தங்களது சொந்த நலன் மட்டுமே முக்கியம். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in