Last Updated : 06 Dec, 2015 12:41 PM

 

Published : 06 Dec 2015 12:41 PM
Last Updated : 06 Dec 2015 12:41 PM

பிரதமர் நரேந்திர மோடி சொன்னது போல் தீவிரவாதத்தை மதத்தில் இருந்து பிரிக்க முடியுமா?

கடந்த மாதம் மலேசியா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி 2 விஷயங்கள் பற்றி பேசினார். முதலாவது, ‘தீவிர வாதத்தை மதத்தில் இருந்து பிரிக்க வேண்டும்’ என்பது. இரண்டாவது, உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது தீவிரவாதம். மோடி சொல்லும் இந்த இரண்டும் உண்மையா?

காஷ்மீருக்கு வெளியில் முஸ்லிம் தீவிரவாதத்தால் இந்த ஆண்டு இறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 21. கடந்த ஆண்டு 4. அதற்கு முந்தைய ஆண்டு 25. அதற்கும் முந்தைய ஆண்டு 1.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட 5 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர். இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் ஏழைகள். நேர்மையாக சொல்ல வேண்டு மானால், பாதி பேர் படிப்பறிவு இல்லாதவர்கள்.

இந்தச் சூழ்நிலையில், பருவ நிலை மாற்றத்தைவிட தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலா? சென்னையில் கனமழை, வெள்ளத் துக்கு காரணம் புவி வெப்ப மயமாதல்தான் என்று பிரதமர் மோடியே ஒப்புக் கொண்டுள்ளார். வெள்ளத்தில் இதுவரை 280 பேர் இறந்துள்ளனர். எனவே, என்னைப் பொறுத்தவரையில் தீவிரவாதம் என்பது மிகைப்படுத்தி கூறப்படுவதாக நினைக்கிறேன்.

ஆனால், மேற்கத்திய நாடுகள் வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, படிப்பறிவின்மை போன்ற பிரச்சினைகளை தாண்டி வந்துவிட்டன. அவர்களுடைய உயிருக்கு தீவிரவாதம் என்பது ஒரு இடைஞ்சல்தான். மற்றபடி இந்தியர்களைப் போல் அல்லாமல், மேற்கத்திய நாட்டினர் எல்லா வகையிலும் வசதியாகவே உள்ளனர்.

இங்கு பிரதமர் மோடி கூறியது போல், தீவிரவாதத்தை மதத்தில் இருந்து பிரிப்பது எப்படி? இங்கே சில விஷயங்களைக் கூற விரும்புகிறேன்.

நீங்கள் தமிழ் பேசும் இந்துவாக இருந்து பிரதமரை கொன்றதற்காக தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் தண் டனை பெற்றிருந்தால் உங்களை தூக்கிலிட மாட்டார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றத்துக்காக, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர்களை தூக்கிலிட வேண்டாம் என்று கடந்த ஆண்டு முடிவானது. மேலும் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

நீங்கள் பஞ்சாபி பேசும் சீக்கியராக இருந்து, முதல்வரை கொன்ற குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், உங்களையும் தூக்கிலிட மாட் டார்கள். பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங்கை கொன்ற குற்றத்துக்காக பல்வந்த் சிங் ரஜோனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவரையும் தூக்கிலிடவில்லை. தன்னை கொன்று தனது உடல் உறுப்புகளை தானமாக கொடுங்கள் என்று ரஜோனாவே வேண்டுகோள் விடுத்தார். அப்படியும் அவரை தூக்கிலிடவில்லை.

பஞ்சாபி பேசும் மற்றொரு சீக்கியர் தேவிந்தர் பால் சிங் புல்லர், கடந்த 93-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவரை கொல்ல முயன்ற குற்றத்துக்காகவும் தூக்கிலிடப்படவில்லை.

சிந்தி மற்றும் குஜராத்தி மொழி பேசும் இந்து மாயா கோட்னானி, 97 குஜராத்தியர்களை கொன்ற குற்றத்துக்காக தண்டனை விதிக் கப்பட்டவர். ஆனால், அவர் சிறையில்கூட அவ்வளவாக இல்லை. தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறைக்கு வெளியில்தான் இருக்கிறார்.

ஆனால், குஜராத்தி பேசும் முஸ்லிமாக நீங்கள் இருந்து தீவிரவாத குற்றச்சாட்டு இருந்தால், உங்களை தூக்கிலிடுவார்கள். யாகூப் மேமனை உதாரணமாக கூறலாம். யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது என்று சிலர் குரல் கொடுத்தனர். அவர்கள் பொது வாக மரண தண்டனையை எதிர்ப் பவர்கள். ஆனால், மேமனுக்கு குஜராத்திகளிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை.

காஷ்மீரி பேசும் முஸ்லிமாக நீங்கள் இருந்தால் உங்களை தூக்கிலிடுவார்கள். உதாரணம் அப்சல் குரு.

தங்களுடைய மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாதிகளைக் காப்பாற்ற, தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைகளில் கடும் அழுத்தம் தரப்படுகிறது. குஜராத்தில் கூட, கோட்னானி அமைச்சராக இருந்தார். அப்போதைய முதல்வர் (இப்போதைய பிரதமர் மோடி), குஜராத்திகளுக்கு எதிராக கோட்னானியின் நடவடிக்கைகளை கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

நான் சொல்வது எதுவும் புதிய விஷயமல்ல. பகிரங்கமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

என்னுடைய கேள்வி என்னவென்றால், தீவிரவாதத்தை மதத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என்று சொல்வது நேர்மையானதாக, தகுதியானதாக இருக்கிறதா? அதை ஒரு நாட்டின் தலைவர் செய்ய விரும்பினால், அவர் முதலில் என்ன செய்ய வேண்டும்?

நான் சொல்வேன், தீவிரவா தத்தை மதத்தில் இருந்து பிரிப்பது யாராக இருந்தாலும் கடினம். நான் சொன்னது போல் இந்து அல்லது சீக்கிய தீவிரவாதிகளை நாம் தீவிரவாதிகள் என்று பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல. அவர்கள் தண்டனை பெற்றவர்களாக இருந்தாலும் சரி, தீவிரவாதிகளை போலவே தற்கொலைப் படை தாக்குதல் போன்ற தந்திரங்களை பயன்படுத்தி இருந்தாலும் சரி, அவர்களுடைய இலக்குகளுடன் அப்பாவி பொதுமக்கள் பலியாகி இருந்தாலும் சரி, அவர்களை தீவிரவாதிகளாக பாவிப் பதில்லை.

நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த ஆதரவு அளித்த குற்றத்துக்காக அப்சல் குருவுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதித்தால்தான், ஒட்டுமொத்த சமூகமும் திருப்தி அடையும்’ என்று கருத்து தெரிவித்ததுற.

இதுபோன்று முஸ்லிம் அல்லாதவர்களை, அவர்களுடைய குற்றங்களுக்காக தூக்கிலிட வேண்டும் என்று நம்மால் நியாயம் சொல்ல முடிவதில்லை. எனவே நமது மனதளவில் தீவிரவாதத்தை மதத்தில் இருந்து பிரிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x