Published : 24 Apr 2021 07:46 PM
Last Updated : 24 Apr 2021 07:46 PM

கரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள்: பிறந்த நாளில் சச்சின் வேண்டுகோள்

கரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என்று தனது பிறந்த நாளன்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் அண்மைக் காலமாக கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு பிரபலங்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் ராய்ப்பூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற உலக சீரிஸ் கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து தான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கடந்த மாதம் 27-ம் தேதி தெரிவித்தார். சிகிச்சைக்குப் பிறகு சச்சின் குணமடைந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் தனது 48-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

''கடந்த மாதம் லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் நான் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். இதில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதைத் தொடர்ந்து வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். மருத்துவர்கள் கூறிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றினேன்.

இன்று என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்களின் வாழ்த்துகள் என்னுடைய நாளை இன்னும் சிறப்பானதாக மாற்றி இருக்கிறது. இதற்கு நான் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.

நீங்கள் (ரசிகர்கள்), என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் அனைவரும் என்னை நேர்மறையான சிந்தனையில் இருக்க வைத்தீர்கள். கரோனாவில் இருந்து மீண்டுவர உதவினீர்கள். உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி.

கரோனாவிலிருந்து குணமானவர்கள் சரியான நேரத்தில் பிளாஸ்மா தானம் அளித்தால் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைந்து குணமடைவர். வாய்ப்பு இருந்தால் நானும் பிளாஸ்மா தானம் செய்வேன். இதுகுறித்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். கோவிட் 19-ல் இருந்து மீண்டவர்கள் மருத்துவர்களுடன் பேசி, வாய்ப்பிருந்தால் தயவுசெய்து உங்களுடைய ரத்த பிளாஸ்மாவைத் தானம் செய்யுங்கள்" .

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x