Published : 24 Apr 2021 08:11 AM
Last Updated : 24 Apr 2021 08:11 AM

சொத்துக்களுக்கான மின்னணு அட்டைகள் விநியோகம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி

சுவாமித்வா திட்டத்தின் கீழ் சொத்துக்களுக்கான மின்னணு அட்டைகளின் விநியோகத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

சுவாமித்வா திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்வில் 4.09 லட்சம் சொத்து உரிமைதாரர்களுக்கு அவர்களது சொத்துக்களுக்கான மின்னணு அட்டைகள் வழங்கப்படும். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2021-ஐயும் பிரதமர் வழங்கவிருக்கிறார். பின்வரும் பிரிவுகளில் தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2021 வழங்கப்படவிருக்கின்றன:

தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத் சஷாக்திகரன் புரஸ்கார் (224 பஞ்சாயத்துகளுக்கு), நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ் கிராம் புரஸ்கார் (30 கிராம பஞ்சாயத்துகளுக்கு), கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்ட விருது (23 கிராம பஞ்சாயத்துகளுக்கு), குழந்தைகளுக்கு தோழமையான கிராம பஞ்சாயத்து விருது (30 கிராம பஞ்சாயத்துகளுக்கு) மற்றும் மின்னணு-பஞ்சாயத்து விருது (12 மாநிலங்களுக்கு).ரூபாய் 5 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான பரிசுப் பணத்தை (மானிய உதவியாக) பிரதமர் வழங்குவார்.

பஞ்சாயத்துக்களின் வங்கி கணக்குகளுக்கு பரிசுப் பணம் உடனடியாக நேரடியாக பரிவர்த்தனை செய்யப்படும். இவ்வாறு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சுவாமித்வா திட்டம் குறித்து கிராமங்களின் ஆய்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு கிராமப்பகுதிகளை விவரணையாக்கம் எனும் சுவாமித்வா திட்டம், சமூக பொருளாதார அளவில் அதிகாரமளிக்கப்பட்ட, தற்சார்பு மிக்க கிராமப்புற இந்தியாவை ஊக்குவிப்பதற்காக 2020 ஏப்ரல் 24 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது.

விவரணையாக்கம் மற்றும் ஆய்வுக்காக நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி ஊரக இந்தியாவை மாற்றியமைக்கும் திறன் இந்த திட்டத்திற்கு உள்ளது. கடன்கள் மற்றும் இதர நிதி பலன்களை பெறுவதற்காக சொத்தை நிதி வளமாக கிராமத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு இது வழிவகுக்கிறது.

நாடு முழுவதிலும் உள்ள 6.62 லட்சம் கிராமங்களில் 2021 முதல் 2025 வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன் ஆரம்ப கட்டம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 2020-2021-ல் செயல்படுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x