Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM

கரோனா நோயாளிகள் மூச்சுத் திணறலை சமாளிப்பது எப்படி?- மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி

வீடுகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள் 'புரோனிங்' செய்யலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களின் மருத்துவமனைகளில் படுக்கைவசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான நோயாளிகளுக்கு அவரவர் வீடுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் வீடுகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் மத்திய சுகாதாரத் துறை புதியவழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

வீடுகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மூச்சுத் திணறலை சமாளிக்க நோயாளிகள் 'புரோனிங்' செய்யலாம். இதற்கு 5 தலையணைகள் தேவை. நோயாளி குப்புற படுத்து கொள்ள வேண்டும். அவரது கழுத்தில் ஒரு தலையணை, மார்பு முதல் தொடை வரை 2 தலையணைகள், காலில் 2 தலையணைகளை வைக்க வேண்டும்.

சுமார் 30 நிமிடங்கள் முதல் 2 மணி வரை குப்புற படுத்துக் கொள்ளலாம். அதன்பிறகு 30 நிமிடங்கள் முதல் 2 மணி வரை வலதுபுறமாக படுக்கலாம். இதன்பிறகு இதே கால அளவில் அமரும்நிலையில் இருக்க வேண்டும். அதன்பிறகு இதே கால அளவில் இடதுபுறமாக படுத்து கொள்ளலாம். இறுதியாக மீண்டும் குப்புற படுத்துக் கொள்ளலாம். இந்த 'புரோனிங்' முறையால் சுவாச பிரச்சினையை சமாளிக்க முடியும்.

சாப்பிட்ட உடன் ‘புரோனிங்' செய்யக்கூடாது. அரை மணி நேரத்துக்கு பிறகு செய்யலாம். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், கழுத்து வலி, கழுத்து முறிவு ஏற்பட்டவர்கள் கண்டிப்பாக 'புரோனிங்' செய்ய கூடாது.

நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருந்தால் குடும்பத்தினர் சேர்ந்து அவசர கால 'புரோனிங்' சிகிச்சை அளிக்கலாம். அதன்படி நோயாளியை ஒரு படுக்கையில் நேராக படுக்க வைக்க வேண்டும். நோயாளியின் மீது போர்வை போர்த்த வேண்டும்.

2 தலையணையை மார்பு பகுதியிலும் 2 தலையணைகளை இடுப்பு பகுதியிலும், 2 தலையணைகளை கால் பகுதியிலும் வைக்க வைண்டும். தலையணைகளின் மீது ஒரு போர்வையை போர்த்த வேண்டும். மேலே போர்த்தப்பட்ட போர்வையின் கரைகளை மடிக்க வேண்டும். இருபுறமும் குடும்ப உறுப்பினர்கள் நின்று கொண்டு நோயாளியை வலது ஓரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதன்பிறகு இடதுபுறமாக நோயாளியை படுக்க வைக்க வேண்டும். அதன்பிறகு குப்பற படுக்க வைக்க வேண்டும். இதன் பிறகு நோயாளிமீது போர்த்தப்பட்டிருக்கும் போர்வையை நீக்கிவிடலாம்.

நோயாளியின் வலது கரத்தை எடுத்து அவரது தலையை ஒட்டி முன்பக்கமாக வைக்க வேண்டும். பின்னர் நோயாளியின் மீது மீண்டும் போர்வையை போர்த்த வேண்டும். அந்த போர்வையை நோயாளியை சுற்றி மடிக்க வேண்டும். நோயாளியை சற்று முன்புறமாக தள்ள வேண்டும். நோயாளியின் தலையை ஒருவர்சிறிது நேரம் நேராக பிடித்து வைத்திருக்க வேண்டும். இதன்பிறகு நோயாளியின் தலையை இடதுபுறமாக சாய்த்து வைக்க வேண்டும்.பின்னர் நோயாளியை வலதுபுறமாக படுக்க வேண்டும். இறுதியாக நோயாளியை நேராக படுக்க வைக்க வேண்டும். அதன்பிறகு போர்வை, தலையணைகளை நீக்கி விடலாம்.

புரோனிங் தொடர்பான முழுமை யான சிகிச்சை நடைமுறைகளை மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x