

கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாட்டில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவ கட்டமைப்பு, மருத்துவ மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இது சுமையை அதிகரித்துள்ளது.
இதனிடையே கரோனா வைரஸ் அச்சுறுத்தலை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதலாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதற்கு கரோனா வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம். ஆனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ஐசியு (தீவிர சிகிச்சைப் பிரிவு) படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழக்கின்றனர். மத்திய அரசாங்கமே இது உங்களால்தான் ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.
டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. சர் கங்கா ராம் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 25 கரோனா நோயாளிகள் இறந்ததாக நேற்று தெரிவிக்கப்பட்டது. என்றாலும் இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமல்ல என்று அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.