

ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வீடுகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
சம்பந்தப்பட்ட வீடுகளில் உள்ள அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருந்தால், வீட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என விழிப்புணர்வு போஸ்டர்் ஒட்டப்படும்.
இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று ராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜோத்பூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. மற்ற முக்கிய நகரங்களிலும் போஸ்டர் ஒட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த போஸ்டரைப் பார்க்கும் மக்கள் தாங்களும் தடுப்பூசி போட்டு கொள்ள முன்வருவர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஜோத்பூர் வடக்கு மாநகராட்சி ஆணையர் ரோஹித்சவா தோமர் கூறும்போது, “மேயரின் உத்தரவுப்படி மருத்துவக் குழுவினர் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். மேலும் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வீடுகளில் போஸ்டர் ஒட்டும் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளிலும் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது” என்றார்.