இந்துக்களுக்கான நான்கு தல யாத்திரை மே முதல் தொடக்கம்: கரோனா விதிமுறைகள் அவசியம் என அறிவிப்பு 

இந்துக்களுக்கான நான்கு தல யாத்திரை மே முதல் தொடக்கம்: கரோனா விதிமுறைகள் அவசியம் என அறிவிப்பு 
Updated on
1 min read

இந்துக்களுக்கான இந்த வருட நான்கு தல யாத்திரை மே முதல் தொடங்குகிறது. இதில் யாத்ரிகர்கள் கரோனாவிற்கான விதிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தராகண்ட் அரசு அறிவித்துள்ளது.

பாஜக ஆளும் உத்தராகண்டின் கடுவால் பகுதியில் இந்துக்களின் நான்கு புனித தலங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பத்ரிநாத், கேதர்நாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

’சார் தாம் யாத்ரா’ (நான்கு தல யாத்திரை) என்றழைக்கப்படும் பயணத்துக்கு ஒவ்வொரு வருடமும் புனித யாத்திரை குறிப்பிட்ட நாட்களில் தொடங்கி நடைபெறுகிறது. இதற்குப் பல லட்சம் பக்தர்கள் வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் இருந்து வருவது வழக்கம். இந்த வருடம் இப்புனித யாத்திரை அடுத்த மாதம் மே முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து நான்கு தலங்களின் தேவஸ்தான வாரியத்தின் தலைவரும் கடுவால் பகுதியின் ஆணையருமான ரவிநாத் ராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறும்போது, ''இந்த யாத்திரையின் வழக்கமான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

கடந்த வருடம் போல் இதில், கூடுதலாக அனைத்து வகைப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக யாத்திரைக்கு வருபவர்கள் ஆர்டிபிசிஆர் எனும் மருத்துவப் பரிசோதனை செய்து, கோவிட் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்'' என்று தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக கரோனா பரவல் சற்று தீவிரமாக உள்ளது. இதனால், இந்த வருடம் நான்கு தல யாத்திரைக்காக உத்தராகண்ட் அரசு சற்று முன்னதாகவே பாதுகாப்பு நடவடிக்கைகளைத் எடுக்கத் தொடங்கி உள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் இந்த யாத்திரைக்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர். 2020-ல் இந்த எண்ணிக்கை கரோனாவினால் குறைந்து வெறும் 4.2 லட்சம் என்றானது.

இந்த வருடமும் நான்கு தல யாத்திரைக்கு இ-பாஸ் உள்ளிட்ட கரோனாவிற்கான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு யாத்ரிகர்கரும் தனது புகைப்படம், அடையாள அட்டை போன்றவற்றைக் கையில் வைத்திருப்பதும் அவசியமாக்கப்பட்டு உள்ளது.

மேலும் மழை மற்றும் நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டால், நான்கு தலங்களின் யாத்திரைக் காலம் சற்று நீட்டிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக, பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரியில் அன்றாடம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in