

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், மருத்துவமனைகளில் மிகப்பெரிய துயரச் சம்பவங்கள் நேரலாம், ராணுவம் மூலம் அனைத்து ஆக்ஸிஜன் நிறுவனங்களையும் மத்திய அரசு கையிலெடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தினார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு காப்பாற்ற முடியாமல் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
தடுப்பூசி பற்றாக்குறையும் பல மாநிலங்களில் நிலவுகிறது. இதைச் சரிசெய்ய மத்திய அரசும் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. விமானங்கள் மூலம் ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை அனுப்பி வருகிறது,ரயில்கள் மூலம் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்று தனது கருத்துக்களை முன்வைத்தார். டெல்லியில்தான் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கங்காராம் மருத்துவமனையில் மட்டும் நேற்று 25 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்கு உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் கேஜ்ரிவால் பேசியதாவது:
பல்வேறு மாநிலங்களி்ல் இருந்து வரும் ஆக்ஸிஜன் டேங்கர்கள் டெல்லிக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் வருவதற்கு அனைத்து மாநில முதல்வர்களும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லி மக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கிறார்கள். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் மிகப்பெரியத் துயரச் சம்பவங்கள் ஏதும் நடந்துவிடுமோ என அஞ்சுகிறோம். அவ்வாறு நடந்தால் ஒருபோதும் நாங்களே எங்களை மன்னிக்க முடியாது. நான் இருகரம் கூப்பி உங்ககளிடம் கேட்கிறேன், ஆக்ஸிஜன் டேங்கர்கள் டெல்லிக்கு இடையூறு இல்லாமல் வருவதற்கு உதவ வேண்டும்.
கரோனா வைரஸால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க தேசிய அளவிலான திட்டம் தேவை. நாட்டில் உள்ள ஆக்ஸிஜன் தயாரிக்கும் அனைத்து ஆலைகளையும் ராணுவம் மூலம் மத்திய அரசு கையகப்படுத்த வேண்டும். அங்கிருந்து வெளியேறும் ஒவ்வொரு டேங்கர் லாரிக்கு முன்பும் ராணுவ வாகனம் பாதுகாப்புக்குச் செல்ல வேண்டும்.
ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் இருந்து ஆக்ஸிஜன் டெல்லிக்கு வருகிறது. அவற்றை விமானம் மூலம் கொண்டு வரவும், அல்லது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்மூலம் விரைவாக கொண்டு வர வேண்டும்.
தடுப்பூசிக்கு மத்திய அரசுக்கு ஒருவிலை, மாநில அரசுகளுக்கு ஒருவிலை, தனியாருக்கு ஒரு விலை என 3 விலை வைக்கப்படுகிறது. இதை மாற்றி, ஒரு தேசம், ஒரே விலையை அமல்படுத்த வேண்டும்
இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.