வாரணாசியில் கரோனா நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக உணவளிக்கும் தொண்டு நிறுவனங்கள்

வாரணாசியில் கரோனா நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக உணவளிக்கும் தொண்டு நிறுவனங்கள்
Updated on
1 min read

உத்தரப் பிரதேசம், வாரணாசியில் கரோனா நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக உணவளித்து சமூக சேவை மற்றும் தனியார் நிறுவனங்கள் உதவி வருகின்றன. இதற்காகத் தனியாக வாட்ஸ் அப் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியாக இருப்பது வாரணாசி. உ.பி.யின் தெய்வீக நகரமான இங்கு தனியாக வாழும் மூத்த குடிமக்களும், சாதுக்களும் அதிகம். இவர்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். இதனால், அவர்களில் பலருக்குக் குறித்த நேரத்தில் உணவு கிடைக்காத சூழல் நிலவுகிறது.

இதைச் சமாளித்து அவர்களுக்கு உதவ அங்குள்ள சமூகசேவை மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதற்காக, அவர்களுக்கு இலவசமாக உணவு அளிக்க வேண்டி வாட்ஸ்அப் எண்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் அவர்கள், கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் வீடுகளின் விலாசம் அளித்து உணவு கோரலாம். தகவல்கள் அவர்களுக்குத் தொலைபேசி செய்து உறுதிப்படுத்தப்படுகின்றன. பிறகு, அவர்களின் தேவைக்கேற்றபடி அன்றாடம் சுத்தமான, சைவ உணவுகள் சமைக்கப்படுகின்றன. இவை, நிறுவனங்களின் பணியாளர்கள் மூலமாக காலையும், மாலையும் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நற்பணியில், வாரணாசியின் பிரபல தீந்தயாள் ஜலான் ரீடெய்ல், ஜலாஸ் குரூப் ஆகிய தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சமூக சேவை அமைப்புகளில் ஓ.எஸ்.பால் குந்தன் பவுண்டேஷன்ஸ் இப்பணியைச் செய்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in