

நாடு முழுவதும் தடுப்பூசிக்கு ஒரே விலை நிர்ணயிக்கக் கோரி அனைத்து மாநிலங்களும் சேர்ந்து ஒரு பேச்சுவார்த்தைக் குழுவை உருவாக்க வேண்டும். அந்தக் குழு மூலம் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த நிலையில், இனிமேல் வெளிச்சந்தையில் மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகள், மாநிலங்கள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம். 50 சதவீதம் தடுப்பூசிகளை மத்திய அரசுக்கும், 50 சதவீதத்தை மாநிலங்களுக்கும், வெளிச்சந்தையிலும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விலை அளவுக்குக் கட்டுப்பாடு ஏதும் மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை.
வெளிச்சந்தையில் தற்போது கரோனா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படாத நிலையில் தகுதியான வயதுள்ளவர்கள் அதாவது 45 வயதுள்ளவர்கள், அரசு மருத்துவமனைகள் தவிர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ரூ.250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் வெளியிட்ட புதிய விலையில், வெளிச்சந்தையில் தனியாருக்கு ரூ.600 (2 டோஸ்) ஆகவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் நிர்ணயித்துள்ளது. இரு வேறு விலையில் விற்பனை விலைக் கொள்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த இரு விலைக் கொள்கையால் ஏழைகளுக்கும், விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதில் சிரமம் ஏற்படும். தனியார் மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்ப்பார்கள். ஆதலால், இந்த விலைக் கொள்கையைத் திரும்பப் பெறக் கோரி வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் தடுப்பூசி கொள்கை குறித்து விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
''மத்திய அரசின் தடுப்பூசிக்குப் பல விலைகளை வைத்துக்கொள்ள அனுமதி அளித்திருப்பது பாகுபாடானது, பிற்போக்குத்தனமானது. மாநில அரசுகள் ஒன்றுசேர்ந்து இந்த முடிவைப் புறக்கணிக்க வேண்டும்.
மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து விலை பேச்சுவார்த்தைக் குழுவை ஏற்படுத்தி முன்னெடுப்பதுதான் சிறந்த வழி. இந்தப் பேச்சுவார்த்தைக் குழு 2 மருந்து நிறுவனங்களுடன் பேசி நாடு முழுவதும் தடுப்பூசிக்கு ஒரே மாதிரியான விலை வைக்கப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒரே மாதிரியான விலை வைக்க மருந்து உற்பத்தியாளர்களுக்கு மாநில அரசுகள் சேர்ந்து வலியுறுத்த வேண்டும்.
மாநில அரசுகள் அனைத்தும் இதற்கு முன்னெடுக்க வேண்டும். மத்திய அரசு தனது பொறுப்புகளில் இருந்து தவறி, கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் ஈட்ட சரணடைந்துவிட்டது''.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.